தற்போதைய செய்திகள்

அரசு கேபிள் டி.வி. சார்பில் 1 கோடி செட்டாப் பாக்ஸ்கள் வழங்க இலக்கு – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்…

திருப்பூர்:-

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சார்பில் 1 கோடி இலவச செட் டாப் பாக்ஸ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சரும், கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை பழைய மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தின் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

மறைந்தாலும் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்து வருகின்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார். குறிப்பாக பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையினை பெறும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த மே 2011-ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் புத்துயிர் ஊட்டப்பட்டு சந்தாதாரர்களுக்கு மாதம் ரூ.70 என்ற மிக குறைந்த கட்டணத்தில் 100 சேனல்களை வழங்கி வந்தது.

இச்சேவையினை மேலும், விரிவு படுத்தும் வகையில் கேபிள் டி.வி. ஒளிப்பரப்பினை மக்கள் துல்லியமாக கண்டுகளிக்க ஏதுவாக கடந்த 17.04.2017 அன்று அம்மா அரசின் தொடர் முயற்சியால் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடமிருந்து டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று முதலமைச்சரால் கடந்த 01.09.2017 அன்று டிஜிட்டல் ஒளிபரப்பு முறை தொடங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் இதுவரை சுமார் 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 35.12 லட்சம் செட்டாப்பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படடுள்ளது. இதனால் பொது மக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை இந்நிறுவனம் சிறப்பான முறையில் வழங்கி வருகிறது.

மேலும், இச்சேவையினை பொதுமக்கள் முழுமையாக பெறும் வகையில் முதலமைச்சர் கடந்த 31.07.2019 அன்று தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையின் படி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.130 மற்றும் ஜி.எஸ்.டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயித்து அரசு கேபிள் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டண குறைப்பின் காரணமாக கடந்த நாட்களில் சுமார் 22 லட்சமாக இருந்த செட்டாப் பாக்ஸ் தற்போது 25 லட்சமாக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் சார்பில் 1 கோடி இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 30.08.2019 அன்று நமது மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி ஆபரேட்டர்களின் எண்ணிக்கை சுமார் 951, அரசு செட்டாப்பாக்ஸ் எடுத்தவர்களின் எண்ணிக்கை 669 நமது மாவட்டத்திற்கு வரப்பெற்ற செட்டாப்பாக்ஸ்களின் எண்ணிக்கை சுமார் 1,36,300 ஆகும்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் தனியார் செட்டாப் பாக்ஸ்களை தவிர்த்து அரசு செட்டாப்பாக்ஸ்களை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அரசின் அனுமதியின்றி தேவையற்ற ஒயர்களை அகற்றுவதற்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை நிறைவு செய்து தமிழகம் வந்தவுடன் கால்நடைகள் பயன்பெறும் வகையில் கால்நடை பரமரிப்புத்துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் நவீன வசதிகளுடன் கூடிய 1968 என்ற இலவச ஆம்புலன்சு சேவை துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன், கரைப்புதூர் ஏ.நடராஜன், கே.என்.விஜயகுமார், உ.தனியரசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் , மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டா ஆர்.சுகுமார், மாநகர காவல் துணை ஆணையர் இ.எஸ்.உமா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர்கள் செண்பகவள்ளி, அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியர் ஜெய்சிங், அனைத்து அரசு துறைகளின் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.