சிறப்பு செய்திகள்

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….

மேட்டூர்:-

மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியைக் கடந்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக அணையை திறந்து வைத்துள்ளார்.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் மேட்டூர் நீர்மட்டம் 100 அடியை கடந்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக அணையை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணை 85-வது முறையாக பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் , மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தார்.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தினமும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாய நிலங்களும் பாசனம் பெறும் என்று அவர் கூறினார். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகவும், முறை வைத்தும் பயன்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டார்.கர்நாடகாவில் 2 முக்கிய அணைகளும் நிரம்பிவிட்டதால் அவர்கள் தண்ணீரை திறந்தே ஆக வேண்டிய நிலை நிலவுவதக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மழை நீர் வீணாகாமல் இருக்க மேட்டூர் – கொள்ளிடம் இடையே மேலும் 3 தடுப்பணைகள் உட்பட 5 தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கோதாவரி – காவிரி இணைப்பை நிச்சயமாக அ.தி.மு.க. அரசு சாத்தியமாக்கும் என்றும் அதன் மூலம் 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்

மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் முழுமையாக கான்கிரீட் கால்வாயாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களையும் கான்கிரீட் கால்வாயாக்க திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டால் சுமார் 20 சதவீத தண்ணீர் வீணாவது தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.