கோவை

தேக்கம்பட்டியில் புத்துணர்வு நலவாழ்வு முகாம் துவங்கியது – சவர்பாத் குளியலால் யானைகள் குஷி

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள யானைகள் சவரில் குளித்தும், பழங்கள் உள்ளிட்ட ஊட்டசத்து உணவுகளை சாப்பிட்டும் உற்சாகமடைந்தன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோவில்களில் மக்கள் வெள்ளத்தின் நடுவே திருப்பணிகளை மட்டும் ஆண்டு தோறும் மேற்கொள்ளும் யானைகளுக்கு அவற்றின் மன அழுத்தத்தையும் சோர்வை போக்கி யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களால் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் துவங்கப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக முதுமலை தெப்பக்காட்டில் நடத்தப்பட்ட இந்த யானைகள் நலவாழ்வு முகாம் பின்னர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 12-வது ஆண்டாக நடத்தப்படும் இந்த யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கோவில் யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமானது வனவிலங்குளுக்கு மிக உகந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியாகவும், மூன்று பக்கங்களும் மலைகளாலும் வற்றாத ஜீவநதியான பவானி ஆற்றங்கரை ஓரத்தில் இயற்கையான சூழலில் நடத்தப்படுவது தனி சிறப்பாக உள்ளது. நேற்று துவங்கியுள்ள இம்முகாமில் திருக்கோவில் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான 26 யானைகள் பங்கேற்றுள்ளன.

மேட்டுப்பாளையத்தில் இயற்கையான சூழலில் 48 நாட்கள் நடைபெறும் இந்த புத்துணர்வு முகாமினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்தர்ரெட்டி யானைகளுக்கு பழங்களை கொடுத்து முகாமை துவக்கி வைத்தார். ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இந்த முகாமில் யானைகளுக்கு சோளத்தட்டு, கூந்தபனை, தென்னை மட்டை , மசால் புல் உள்ளிட்ட பசுந்தீவனங்களும், கொள்ளு, பாசிபயிறு, பேரிச்சை, அரிசி சாதம் போன்ற ஊட்டசத்து உணவு வகைகளும் அளிக்கப்பட்டன.

மேலும் யானைகளின் உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு யானைகளுக்கு தேவையான உடல் சிகிச்சை நடைபயிற்சி என யானைகளின் உடல் நலனை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன, இந்த முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்கு அவற்றின் உடல் எடை சரிபார்க்கப்பட்டு உடல் எடையை குறைக்க தினசரி காலை மாலை நடைபயிற்சி போன்றவை அளிக்கப்பட உள்ளது. மேலும் ஆற்றுப்படுகை இல்லாத கோவில் யானைகள் ஆற்றுநீரில் குளித்து மகிழ்வதற்காக யானைகளுக்கென தனியாக சவர் பாத் ஏற்பாடு செய்யபட்டுள்ளதால் அதில் யானைகள் ஒய்யாரமாக படுத்து குளித்து மகிழ்கின்றன.

மேலும் ஒரே மாவட்டத்தில் இருந்தாலும் ஒருமுறை கூட யானைகள் ஒன்றையொன்றை பார்க்க வாய்ப்புகள் இல்லாததால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே யானைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சந்தித்து கொள்வதால் யானைகள் பாசத்துடன் துதிக்கையால் ஒன்றை ஒன்று கட்டி தழுவியும், உற்சாகத்தில் சப்தம் எழுப்பி பிளிறியும் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அத்துடன் யானைகளுக்கே உரித்தான வகையில் மண்ணை தலையில் வாரி போட்டுக்கொண்டு யானைகள் உற்சாக மனநிலையில் திளைக்கின்றன.

மேலும் சில யானைகள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக மவுத்ஆர்கான் வாசித்து உற்சாகம் அடைந்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் வசிக்கும் யானைகள் ஆற்று நீரினை கண்டவுடன் உற்சாகமடைந்து சவரில் பாகன்கள் அழைத்தும் எழுந்து வராமல் ஆனந்த குளியல் போட்டு வருகிறது. 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் இந்த யானைகள் பராமரிக்கப்பட்டு பின்னர் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கோவில்களில் தனித்தனியாக இதுவரை பார்த்து ரசித்த யானைகள் தேக்கம்பட்டியில் ஒரே சமயத்தில் 26 யானைகளை காண முடிவது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் மங்கையரசி, இணை ஆணையர் ராஜமாணிக்கம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், உதவி ஆணையர்கள் ஹர்சினி, நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.