சிறப்பு செய்திகள்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவார் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி….

வேலூர்:-

மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி ெபறுவார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேரணாம்பட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

கழக வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர். அவருடைய காலத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றவர். சிறந்த பண்பாளர். கல்வியாளர். அவர் பல்வேறு நன்மைகளை மக்களுக்கு செய்யும் ஆற்றல் படைத்தவர்.

அவர் வெற்றி பெற்றதும் வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ரூ.2 கோடியில் 6 திருமண மண்டபங்கள் கட்டித் தருவதாக உறுதி அளித்திருக்கிறார். அது மட்டுமல்ல 6 தொகுதியிலும் தலா 100 ஏழை மாணவர்கள் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்விகள் படிப்பதற்கு பொறுப்பேற்பதாக உறுதி அளித்திருக்கிறார். இப்படி பயனுள்ள பல திட்டங்களை அவர் வாக்குறுதியாக தெரிவித்திருக்கிறார். அவரது வாக்குறுதிகள் அனைத்தும் கழகத்தின் வாக்குறுதிகள் ஆகும். ஏனென்றால் அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி அனுபவம் பெற்றவர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை கட்டிக் காத்து புரட்சித்தலைவி அம்மாவின் கரங்களில் ஒப்படைத்தபோது 15 லட்சம் தொண்டர்கள் தான் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஆனால் அம்மா அவர்கள் கட்சியின் தலைமை பொறுப்பேற்றவுடன் ஒன்றரை கோடி தொண்டர்கள் நிறைந்த ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றி காட்டினார். வரலாற்றில் 28 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். இந்த ஆட்சி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை மக்களிடையே சொல்லி குழப்பி கொண்டிருக்கிறார். மத்திய அரசுக்கு

சொந்தமான 28 ஆயிரம் கோடி ரூபாயை நாம் திட்டங்களுக்கு செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டதாக ஒரு தவறான குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். அவரும் துணை முதலமைச்சராக இருந்தவர் தான். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும் கூட இதுபோன்று திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் செலவழித்தது போக 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அரசு வழங்கிய இந்த பணத்தை நாம் உரிய முறையில் செலவு செய்யாமல் பயன்படுத்திக் கொள்ளாமல் அதை திருப்பி அனுப்பி விட்டதாக ஏற்கனவே துணை முதலமைச்சராக இருந்து அனுபவம் உள்ள ஒருவர் சொல்வது தான் வேடிக்கை.

அவர் எவ்வளவு பெரிய பொய்யை மக்களிடம் சொல்லி ஏமாற்றுகிறார் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு திட்டத்திற்கான செலவு ஒரு கோடி ரூபாய் அல்லது 50 லட்சம் ரூபாய் என்றால் அந்த திட்டம் சில வேளைகளில் குறைந்த செலவில் முடிவுற்று இருக்கும். அந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் மீதம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பணத்தை தான் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. மாநில அரசு செயல்படுத்த முடியாமல் திருப்பி அனுப்பி விட்டதாக அதை கருதக்கூடாது. அந்த பணம் எப்பொழுதும் நமக்கு ஒதுக்கப்பட்ட பணம் தான். மத்திய அரசு திருப்பி எடுத்துக் கொண்ட அந்த பணம் மீண்டும் நம்முடைய திட்டங்களுக்காக திருப்பி கிடைத்து விடும்.

எனவே மத்திய அரசின் பணத்தை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற நிலையில் மத்திய அரசு அந்த பணத்தை திருப்பி எடுத்து கொண்டதாக கருதக்கூடாது. அது எப்போதும் நமக்கு ஒதுக்கப்பட்ட பணம் தான். அந்த பணம் எந்த நேரத்திலும் நம்முடைய திட்டங்களுக்காக திருப்பி கிடைக்கும். இது வழக்கமான ஒரு நடைமுறை தான். தி.மு.க. ஆட்சியிலும் இது நடந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஒருவர் இப்படி விபரம் புரியாமல் ஒரு குற்றச்சாட்டை சொல்வது முற்றிலும் தவறானது. இது மக்களை திசை திருப்பும் முயற்சி ஆகும்.

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் தெளிவானவர்கள். விபரம் புரிந்தவர்கள். யாருக்கு எந்த நேரத்தில் வாக்களிக்க வேண்டும். யாரை பதவியில் அமர செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். சில சமயங்களில் பொய்யான வாக்குறுதிகளை நம்பி அவர்கள் சிலரை வெற்றி பெற செய்து விடுவார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அப்படி செய்வது வழக்கம். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஆள வேண்டும் என்பது மக்களின் தெளிவான தீர்ப்பாகும்.

அதை கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலின்போது தெளிவாக அறிவித்து விட்டார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் விருப்பமாகும். இப்பொழுது மட்டுமல்ல வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலிலும் கழகத்தை வெற்றி பெற செய்து மூன்றாவது முறையாக அம்மாவின் ஆட்சியை அமர செய்யப்போவதும் தமிழக மக்கள் தான். இதை ஸ்டாலின் போன்றவர்கள் உணர்ந்து கொண்டு பேச வேண்டும்.

இப்பொழுது நடைபெறுகின்ற இந்த தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் நல்ல பண்பாளர், கல்வியாளர். அவர் பல நன்மைகளை தொகுதி முழுவதும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறார். பேரணாம்பட்டில் திரண்டிருக்கும் இந்த மாபெரும் மக்கள் கடலை பார்க்கும் போது அவர் மூன்று லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறுவார் என்பது உறுதியாக தெரிகிறது. அவரை அமோக வெற்றி பெற செய்து தமிழகத்திற்கு மேலும் ஒரு பெருமையை தேடித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.