தற்போதைய செய்திகள்

பொய் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலினுக்கு மக்களை திரட்டி பாடம் புகட்டுவோம் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேச்சு

மதுரை:-

அரசுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு மக்களை திரட்டி பாடம் புகட்டுவோம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மேலூரில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அம்மாவின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நமக்கு ஆணையிட்டு உள்ளனர். அதன்படி நலத்திட்ட உதவிகள் வழங்குவது மட்டுமின்றி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் மாட்டுவண்டி பந்தயம், ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

திமுகவை கிஷோர் பிரசாத்திடம் அடமானம் வைத்து விட்டார்கள். தனியாரை நம்பும் அளவுக்கு திமுக சென்று விட்டது என்பது வெட்கக்கேடு. ஸ்டாலின் திமுக தொண்டர்களை நம்பாமல் பிரசாந்த் கிஷோரை நம்புகிறார். குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார்.

இச்சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். 10 லட்சம் பேரிடம் தி.,மு.க.வினர் கையெழுத்து வாங்கியிருந்தாலே ஆச்சரியம் தான். அதை விடுத்து விட்டு இரண்டு கோடி கையெழுத்து வாங்கி இருக்கிறோம் என்று பொய் சொல்வது எதிர்கட்சித் தலைவருக்கு அழகு இல்லை. தொடர்ந்து இந்த அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வரும் ஸ்டாலினுக்கு மக்களை திரட்டி தக்க பாடம் புகட்டுவோம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் நிலையூர் முருகன், தக்கார் பாண்டி, வெற்றி செழியன் பொன்னுச்சாமி, பகுதி கழக செயலார்கள் ஜீவானந்தம், பன்னீர்செல்வம், வண்டியூர் முருகன், நகர செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.