சிறப்பு செய்திகள்

சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை குறைக்கலாம் – வாகன ஓட்டிகளுக்கு அமைச்சர்கள் அறிவுரை…

கோவை:-

சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை குறைக்கலாம் என்று வாகன ஓட்டிகளுக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இக்கருத்தரங்கை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இடர்பாடுகளை கலைய, மத்திய அரசுடன் பேசி முதல்-அமைச்சர் வெற்றி பெற்றுள்ளார். போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுத்த முயற்சியினால் ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் 24 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 15 சதவீதம் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி நாடாளுமன்றத்தில் கூறினார்.94 சட்ட திருத்தங்களில் 5 சட்ட திருத்தங்களில் மாநில உரிமை பாதிக்கப்படுகிறது. இவற்றில் திருத்தம் கேட்டுள்ளோம்.சாலை விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இலங்கை, மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கின்றனர்.

சாலை விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துகள் குறையும். சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை கழக அரசு எடுத்து வருகிறது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் மிக அதிகமாக உள்ளது.கிராம பகுதியில் தலைகவசம் அணிவது குறைவாக உள்ளது. விபத்துகளில் 68 சதவீதம் பேர் தலை காயங்களால் உயிரிழக்கின்றனர். மேலை நாடுகளில் சைக்கிள் ஓட்டுபவர்கள் கூட தலைகவசம் அணிகின்றனர்.

ஒரு நாளைக்கு 47 ஆக இருந்த சாலை விபத்து உயிரிழப்புகள் 33 ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் சாலைகள் தரமாக இருப்பதால் வாகனங்களின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன. சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, சாலை விபத்துகளை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்துவதில் போக்குவரத்து துறை முக்கிய பங்காற்றுகிறது.மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் கொண்டு வந்தாலும், சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். ஜி.எஸ்.டி. கொண்டு வரும் போது தமிழக அரசு சொன்ன மாற்றங்களை மத்திய அரசு செய்தது. இதனால் மற்ற மாநிலங்களும் பயன்பெறுகின்றன. மக்கள் சாலை விதிகளை பின்பற்றி, விபத்துக்களை குறைக்க வேண்டும். சாலை விதிமீறல்களுக்கு அபராதம் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். சாலை விதிகளை பின்பற்றினால் அபராதம் கட்ட தேவையில்லை.

விவசாய குடும்பத்தில் பிறந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நாடுகளுக்கு சென்று தமிழகத்தின் நலனிற்காக புரிந்துணர்வு பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளார். சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இக்கருத்தரங்கில் போக்குவரத்துத் துறை கமிஷனர் சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி. ஆறுகுட்டி, விபி.கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.