இந்தியா மற்றவை

வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலையிழப்பு ஏற்படாது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி…

வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை காரணமாக எந்த ஒரு ஊழியரின் வேலையும் பறிபோகாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

வரித் துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு :-

கடந்த வாரத்தில் 10 பொதுத் துறை வங்கிகளை இணைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை முன்னிறுத்தி பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அதனை முன்னிறுத்தி அரசுக்கு எதிராக எழுந்துள்ள கருத்துருவாக்கத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.மத்திய அரசு முன்னெடுத்துள்ள வங்கி இணைப்பு நடவடிக்கை காரணமாக நாட்டில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகள் மேம்பாடு அடையுமே தவிர, எந்த விதமான எதிர்விளைவுகளும் ஏற்படாது.இணைப்பு நடவடிக்கை காரணமாக சில வங்கிகள் மூடப்படக் கூடும் என்று தகவல் பரப்பப்படுகிறது. அது முழுக்க, முழுக்க தவறான கருத்து.

எந்த ஒரு வங்கியும் மூடப்படாது. வங்கிகள் இணைப்பை காரணம் காட்டி எந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்யப் போவதில்லை. இந்தக் கருத்தை திட்டவட்டமாகவும், உறுதிபடவும் தெரிவிக்கிறேன். வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு அவற்றுக்கு கூடுதல் முதலீடு அளிக்கப்படும்.ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கை: ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

ஆட்டோ மொபைல் சார்ந்த சேவை மற்றும் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், அதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் என்னால் வரி குறைப்பை அமலாக்க இயலாது என்றார்.