தற்போதைய செய்திகள்

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேளாண்மையில் வெற்றிக் காண்பீர் – விவசாயிகளுக்கு அமைச்சர் இரா.துரைக்கண்ணு வேண்டுகோள்

சேலம்

விவசாய பெருவிழாவில் கற்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேளாண்மையில் வெற்றி காண வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் இரா.துரைக்கண்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் தலைவாசலில் நடைபெற்ற விவசாய பெருவிழா நிறைவு விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு ஆற்றிய உரை வருமாறு:-

இங்கு அமைக்கப்பட்டுள்ள 224 அரங்குகளில் கால்நடை, பால்வளம், மீன்வளம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய பல துறைகளை சேர்ந்த அரங்குகள் கருத்தினையும், கண்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. வேளாண் அரங்கில் பயிர்சார்ந்த தொழில்நுட்பங்கள், பூச்சி நோய் மேலாண்மை, முன்னோடி திட்டங்கள், தமிழ்நாடு அங்கக விளைபொருட்கள், வேளாண்மையில் தகவல் தொழில்நுட்பங்கள்,

உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் குறித்த அரங்குகளும், உர நிறுவனங்கள், பூச்சிக்கொல்லி உற்பத்தி நிறுவனங்கள், விதை உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் அரங்குகளும் தோட்டக்கலையின் திட்டங்களையும், வேளாண் விற்பனை துறையின் திட்டங்களை விளக்கும் அரங்குகளும் முக்கியமாக வேளாண் பொறியியல் துறை மூலம் நவீன பல வேளாண் இயந்திரங்களும் அதற்கு அரசு வழங்கும் மானியங்களும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தன.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, வேளாண்மைத்துறை அரங்கில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதுடன், ஆன்லைனில் பயிர் காப்பீடு, பி.எம்.கிசான், பி.எம்.மான்தான் திட்டங்களில் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

மேலும், வேளாண் மற்றும் தோட்டக்கலை அரங்குகளில் விதை உள்ளிட்ட இடுபொருட்கள், தென்னங்கன்றுகள், விற்பனை செய்யப்பட்டன. நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் மூலம் மண் பரிசோதனை செய்ய இங்கே வழிவகை செய்யப்பட்டுள்ளது. மதிப்பு கூட்டுதலுக்கு தக்காளி சாறு எடுக்கும் நடமாடும் வாகனமும் இங்கே நிறுத்தப்பட்டு விவசாயிகளுக்கு பயன்குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. நுண்ணீர் பாசனம் பல்வேறு பயிர்களிலும் அமைக்கும் முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளின் அரங்குகள் மட்டுமல்லாது அனைத்து துறைகளின் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்குகள் 2 நாட்கள் நடத்தப்பட்டன. ஒருங்கிணைந்த பண்ணையும், பயிர் காப்பீடு, பயிர் பாதுகாப்பு, வேளாண்மையில் சூரிய ஒளி பம்பு செட்டுகள், வேளாண் விற்பனையில் விநியோகத் தொடர் சங்கிலி, நுண்ணீர் பாசனம் உள்ளிட்ட தகவல்களில் பல நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விளக்கங்கள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டு விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு பயன்பெற்றனர். பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், விவசாய குழுக்களும், பால் உற்பத்தியாளர் மற்றும் ஆடு வளர்ப்போர் சங்கங்களும், கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், சுய உதவிக் குழுக்களும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பல்வேறு அரங்கங்களில் இருந்து தான் கற்ற பெற்ற தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வேளாண்மையில் வெற்றிகாண விவசாயிகளை இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஏழைகளின் காவலன் முதலமைச்சர் அடிக்கல் நாட்டு விழாவில் பேசும்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தினை பாதுகாத்திட பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பினை செய்து லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தமைக்கு டெல்டா விவசாயிகளின் சார்பாகவும், எனது சார்பாகவும் எனது இதயத்தில் இருந்து கசியும் கோடானு கோடி நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

இவ்வாறு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்.