தமிழகம்

பூலித்தேவன் திருவுருவ சிலைக்கு துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை…

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும்செவலில் விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கழகத்தினரும், ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டும்செவலில் விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் நேற்று (01.09.2019) நெற்கட்டும்செவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில், துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஒ.எஸ் மணியன் , செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் நேற்று (01.09.2019) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியின் போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் நினைவை போற்றும் வகையில் அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததை தொடர்ந்து மாமன்னர் பூலித்தேவன் நினைவு இல்லம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் அரசு விழாவாக அவரது பிறந்த தினம் தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு விழா சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. அரசின் சார்பில் நாங்கள் அனைவரும் இங்கு வந்திருந்து வீரம்செறிந்த மண்ணில் மரியாதை செலுத்தியுள்ளோம்.

சுதந்திர போராட்டத்தில் மாவீரன் பூலித்தேவன் ஈடுபாடு பெரும்பங்கு என்பதை நாடு பாராட்டி வருகிறது. இந்த உலகம் உள்ளவரை விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் புகழ் நிலைத்து நிற்கும். இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படுவதுடன் இங்கு சுற்றுலா பயணிகள் வருவதற்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பூலித்தேவன் வரலாறு சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வண்ணம் இடம் பெறச்செய்ய இயலும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் (வாசுதேவநல்லூர்) மனோகரன், (தென்காசி) செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், கே.ஆர்.பி.பிரபாகரன் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா, கூட்டுறவு ஆவின் தலைவர் சுதா பரமசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.