தற்போதைய செய்திகள்

தமிழக மக்களின் உரிமைகளை கழக அரசு விட்டு கொடுக்காது – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்டவட்டம்

நாகப்பட்டினம்

தமிழக மக்களின் உரிமைகளை கழக அரசு விட்டுக் கொடுக்காது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவினை ஏழை, எளிய மக்களுக்கு அதிகமான உதவிகளையும், நலத்திட்டங்களையும் வழங்கி கொண்டாட வேண்டும். மேலும் வரும் நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் நாகை மாவட்டத்தில் கழகம் அமோக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்தை முஸ்லிம் மக்களிடையே விஷ விதையாக விதைக்கிறார் ஸ்டாலின். இச்சட்டம் தமிழக மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு ஒரு போதும் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தது. பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த அரசு வேடிக்கை பார்க்காது.

ஓட்டு வாங்குவதற்காக பொய்யான செய்திகளை தி.மு.க. பரப்பி வருகிறது. இதை ஒரு போதும் தமிழக மக்கள் நம்ப வேண்டாம். குடியுரிமை திருத்த சட்டத்தில் எந்த பக்கத்தில், எந்த வரியில் என்ன குறை என்று தி.மு.க.வினால் கூற முடியுமா. வட கிழக்கு எல்லைப் பகுதியில் இருந்து அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்த சட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், குறிப்பாக அசாம் நாட்டிற்கு மட்டும் இந்த சட்டம் பொருந்தும். பேஸ்புக், வாட் அப் போன்றவற்றின் மூலம் பல்வேறு தவறான செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் நிலை மாற வேண்டும்.

வெளிநாடுகளில் சட்டவிரோதமான தங்கி இருந்து பிடிபட்டு கசை அடிபட்டு வரும் பலரை பற்றி ஸ்டாலின் இதுவரை நினைத்து பார்த்தது உண்டா? இஸ்லாமிய உலமாக்களுக்கு 1500 ரூபாய் பணம் கொடுத்து வருவது அ.தி.மு.க. அரசு, சகோதரர்களாக, உறவினர்களாக வாழ்ந்து வரும் மக்கள் மனதில் நஞ்சு தெளிக்கிறார் ஸ்டாலின்.

நல்ல கொள்கை, நல்ல கோட்பாட்டுடன் செயல்படும் கட்சி அ.தி.மு.க.. அதனால் தான் அரை நூற்றாண்டை தாண்டி வளர்ந்து வருகிறது. தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளை ஒருபோதும் அ.தி.மு.க. அரசு விட்டுக் கொடுக்காது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். வரும் நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று நினைத்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர்கள், பவுன்ராஜ், பாரதி, ராதாகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருட்டிணன், அவை சண்முகம், சிவா,குணசேகரன், கிரிதரன், நற்குணன், தமிழரசன், நகர செயலாளர்கள் தங்க கதிரவன், வி.ஜி.கே.செந்தில்நாதன், ஏ.பக்கிரிசாமி, எழிலரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விஜயபாலன், ரெங்கநாதன், சக்தி, பூரா சாமி, மற்றும் மாவட்ட பொருளார் செல்லையன், பேரூர் கழக செயலாளர்கள் போகர் ரவி, ஜே.பி.முரளி, சவுரிராஜன், மகளிர் அணியினர், இளை ஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.