தற்போதைய செய்திகள்

1000 பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…

கரூர்:-

1000 பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூரில் நேற்று புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ரூ.229 கோடி நிதி ஒதுக்கினார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூடுதலாக ரூ.40 கோடி நிதி ஒதுக்கினார். இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 1000 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு முதல் 150 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நவீன ஸ்கேன் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரியிலும் அமைக்க வேண்டுமென அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் உடனே ரூ.6 கோடியில் நவீன ஸ்கேன் அமைக்க உத்தரவிட்டார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் ஏற்பட்ட விபத்து எதிர்பாராதது. பணிமனை மேம்பாட்டுக்கு ரூ.50 கோடியை முதல்- அமைச்சர் ஒதுக்கியுள்ளார். மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிதிமூலமும் மேம்படுத்தப்பட உள்ளது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1,019 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

1000 பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மத்திய அரசின் மானிய உதவியுடன் அமைக்கப்பட உள்ளது. 2 பேட்டரி பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் சென்னை, கோவையில் அந்த பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.