தற்போதைய செய்திகள்

சிறுபான்மையின மக்களின் காவல் அரண் கழக அரசு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதம்…

வேலூர்:-

சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக கழக அரசு என்றும் திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதத்துடன் கூறினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும் முழுமையாக கழக அரசு நிறைவேற்றி கொண்டிருக்கிறது. இந்திய துணை கண்டத்திலேயே தமிழகத்தில் மட்டும்தான் விலையில்லா மடிகணினி 5 லட்சத்து 34 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் கல்வியில் தமிழகத்தின் மாணவ- மாணவிகள் சிறந்து விளங்க அம்மா அவர்களால் மடிகணினி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு இதயதெய்வம் அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட கழகம் என்ற பேரியக்கத்தை எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. பொய்யான வாக்குறுதிகளால் கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலூர் தொகுதிக்கு வரும் பொழுது சொன்ன வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை என பொதுமக்கள் கேட்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அம்மாவின் அரசு என்றும் திகழும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில்தான் முதன் முதலில் பள்ளிவாசலில் பணி புரியும் உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.250 வழங்கப்பட்டது. பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உலமாக்களுக்கு வழங்கிய ஓய்வூதியத்தை ரூ.1000 ஆகவும் பிறகு ரூ.1500 ஆகவும் உயர்த்தி வழங்கினார். ரம்ஜான் காலத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுகிறது. உருது மொழியில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் தான் டிசம்பர் 6-ல் இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதிகள் என கைது செய்தனர். அம்மாவின் ஆட்சியில் டிசம்பர் 6 ல் ஒருவரைக்கூட கைது செய்வது கிடையாது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள ரூ.6.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை உள்ள வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை டெல்லி செங்கோட்டைக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.