தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் அவதூறு பிரச்சாரத்தை முறியடிப்போம் – அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் அறைகூவல்…

வேலூர்:-

தி.மு.க.வின் அவதூறு பிரச்சாரத்தை முறியடித்து கழக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் அறைகூவல் விடுத்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆம்பூர் நகர பகுதியில் பொதுமக்களிடம் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசியதாவது:-

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் இயக்கம் கழகம் கிடையாது. தி.மு.க.வை போல் நமது இயக்கம் வாரிசு அரசியல் கிடையாது. நமது இயக்கத்தில் மட்டுமே சாதாரண தொண்டனும் முதல்வராகலாம். தமிழக மக்களுக்காக உலகம் போற்றும் உன்னத திட்டங்களை தந்த இயக்கம் நமது கழகம் தான். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் சாதிக்க முடியாத பல அரிய சாதனைகளைப் புரிந்து பல்வேறு வெற்றிகளையும், விருதுகளையும் பெற்று பெருமைமிகு மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய பெருமை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை சாரும்.

அம்மாவின் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலம் என அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினர். திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் இருண்ட காலமாக இருந்தது. மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை மெய்ப்பிக்கும் வகையில் இதுவரை இந்திய நாடே கண்டிராத வகையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் எண்ணற்ற நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து மறைந்தார். அதனை நமது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அம்மா வழியில் செயலாற்றி வருகிறார். முதல்வரின் நலத்திட்டங்களால் தமிழகத்தில் பயனடையாத குடும்பங்களே இல்லை என்று சொல்ல முடியும்.

பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு, தொழில் துறை, விவசாயம், மீனவர் மேம்பாடு, என அனைத்து துறைகளிலும் தனது சீரிய திட்டங்களால் வியக்கத்தக்க பல முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளார் முதல்வர்.
தமிழக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் பாதிக்காத வகையிலும், அவர்களது உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தொடர் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

காவேரி பிரச்சினையில் வெற்றி கண்டவர் முதல்வர். ஆனால், மேகதாது பிரச்சினைக்காகவோ, காவேரி பிரச்சினைக்காகவோ தமிழக விவசாயிகளின் நலன் கருதி சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கழகத்துக்கு எதிராக அவதூறு பரப்பினாலும், அதை எல்லாம் முறியடித்து, மக்களின் முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி மக்களின் இதய சிம்மாசனத்தில் நிலையான இடத்தில் அமர்ந்து கோலோச்சி வருகிறார். தமிழகத்தில் வேறு எந்த மாநிலத்திலும் அமல்படுத்தாத மக்கள் நலத்திட்டங்களை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா வழியில் முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத எளிய முதல்வராக உள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திற்காகவே டீக்கடையில் டீ குடிப்பதும், சிறுவர்களுடன் செல்பி எடுப்பதும், கலர் கலராக ரீல் விடுவது போல கலர் கலராக டீசர்ட் அணிந்து தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்க வருகிறார்.

நமது வேட்பாளர் ஏ.சி.சண்முகம் எந்த நேரத்திலும் மக்களுடன் தொடர்பில் இருப்பவர். இவரை வெற்றிபெற செய்தால் உங்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று தருவார். வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். தி.மு.க.வின் அவதூறு பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசினார்.