தற்போதைய செய்திகள்

அம்மா அரசின் சாதனைகளை வீடு வீடாக எடுத்து சென்று சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் – கழக மகளிரணி சூளுரை

சென்னை

அம்மா அரசின் சாதனைகளை வீடு வீடாக எடுத்துச் சென்று சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று கழக மகளிரணி சூளுரைத்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தலைமை கழகத்தில் நேற்று காலை கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கழக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி. தலைமை வகித்தார்.

கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா, கழக மகளிர் இணை செயலாளர் சக்தி கோதண்டனம், கழக மகளிர் அணி இணை யெலாளரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, துணை செயலாளர்கள் கே.எம்.கலைச்செல்வி, டி.சகுந்தலா, சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., டாக்டர் அ.அழகு தமிழ்செல்வி, எல்.ஜெயசுதா, எம்.சந்திரபிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக அமைப்பு செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான சி.பொன்னையன், அனைத்துலக எம்,.ஜி.ஆர். மன்ற செயலாளர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், கழக அமைப்பு செயலாளரும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான என்.தளவாய்சுந்தரம், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, கழக அமைப்பு செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.வளர்மதி, கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் மரகதம் குமரவேல், ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் வி.சத்தியபாமா ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என வாழ்ந்து மறைந்த உலக பெண் இனத்தின் காவல் அரண், வீரமங்கை, உலகே வியக்கும் வண்ணம் வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் பூமியை 6 முறை அரிய பல திட்டங்கள் தந்து ஆட்சி புரிந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண் இனத்தின் முன்னேற்றத்திற்காக தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் காவல் நிலையம், மகளிர் நீதிமன்றம், பெண்கள் கமாண்டோ காவல் படை, மகளிர் மகப்பேறு நிதி ரூ.18 ஆயிரம், அனைத்து பேருந்து நிலையங்களிலும் தாய் பாலூட்டும் அறை, தாலிக்கு ஒரு பவுன் தங்கம், பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50 ஆயிரம், படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம், குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் வைப்பு நிதி, பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம்,

அரசு பணியில் உள்ள பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய 9 மாத கால மகப்பேறு விடுப்பு, மகளிர் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயிலும் வசதி, வீரதீர செயல்கள் புரிகின்ற பெண்களுக்கு ரூ.5 லட்சம் தங்கப்பதக்கம், பண முடிப்புடன் கூடிய கல்பனா சாவ்லா விருது, எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற மகளிர் நலம் காக்கும் திட்டங்களுடன் பெண்கள் பாதுகாப்பில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி கண் துஞ்சாமல், ஊண்உறக்கம் பாராமல் உழைத்த உத்தம தலைவி நம் தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை கழக மகளிர் அணியினர் சார்பில் ஏழை, எளியோர், உழவர்கள், உழைப்பாளிகள், சாமானியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும்,

பெண்களுக்கு கோலப்போட்டி, குழந்தைகளுக்கு பேச்சுப்போட்டி போன்றவை நடத்திடவும், பொது இடங்களிலும் இல்லங்கள் தோறும் அம்மா அவர்களின் திருவுருவ படத்தை அலங்கரித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிடவும், திருக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளவும், ஏழை பங்காளர், எளியோர்க்கான முதலமைச்சர் மாங்கனி மாவட்டம் தந்த இதயக்கனியின் தூய தொண்டர், அம்மாவின் விசுவாச மிக்க தம்பி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலும், துணை முதலமைச்சர் தென்பாண்டி தங்கம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டர்களாக அம்மாவின் புகழை ஓங்கச் செய்ய கழக மகளிர் அணி உறுதி ஏற்கிறது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட இக்கட்டுகளை துடைத்தெறிந்து நாடும், ஏடும் போற்றும் வகையில் கழகத்தையும், கழக ஆட்சியையும் கட்டி காத்து வருகின்ற வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடிய உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான் என்ற அவ்வையாரின் வரிகளுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் குடிமராமத்து என்னும் பணியை செய்து நீர்நிலைகள்,

குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி ஆழப்படுத்தி நீர் இருப்பை உறுதி செய்து விவசாய பெருமக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி தானிய உற்பத்தியில் இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமைமிகு கிரிஷி கர்மான் விருதினை தொடர்ந்து 5-வது ஆண்டாக தமிழ்நாட்டிற்கு பெற்று தந்து வருகின்ற நமது குடிமராமத்து நாயகன், விவசாயிகளின் விடிவெள்ளி,

எடப்பாடியாருக்கும், தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு நாயகன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவைத்தலைவர் இ.மதுசூதனனுக்கும், கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோருக்கும், தலைமை கழக நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும், மாவட்ட கழக செயலாளர்களுக்கும் கழக மகளிர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தலைசிறந்த நிர்வாகம் செய்யும் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவற்றில் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு ஏதுவாக நிர்வாக வசதிக்காகவும், விரைந்த நடவடிக்கைக்காகவும், மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் விரைந்து சென்று சேர்ப்பதற்காகவும் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்துர் மற்றும் ராணிப்பேட்டை ஆகுிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி தமிழ் திருநாட்டிற்கு புதிய வரைபடத்தை உருவாக்கி தந்து தாய் நாட்டின் தலைமகனாய் ஆளுமைமிக்க நல்லாட்சி வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் நீதி,

நிர்வாகம் மற்றும் பொது பாதுகாப்பில் தமிழகம் முதலிடம், பொது உள்கட்டமைப்பு, சாலை, குடிநீர் கழிப்பிட வசதிகளில் தமிழகம் முதலிடம், வேளாண்மை உற்பத்தி, சுகாதார மேம்பாடு, போக்குவரத்து, சுற்றுலாத்துறைகளில் தமிழகம் முதலிடம் என அனைத்து துறைகளிலும் சாதனைகளை வென்று வரலாறு படைக்கின்ற முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றியையும், பாராட்டையும் கழக மகளிர் அணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறது.

ஏழைகளின் ஏந்தல், சத்துணவு தந்த சரித்திர தலைவர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை அதிகமாக உருவாக்கி அதிகளவிலான பொறியியல் வல்லுநர்களை உருவாக்கினார். அதேபோல புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கல்விக்கென சிறப்பு திட்டங்களை வழங்கி கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். அவர் வழியில் வந்த அம்மாவின் புனித தொண்டர் முதலமைச்சர் திருவள்ளூர்,

திண்டுக்கல், உதகமண்டலம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் என 11 மாவட்டங்களில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதோடு மருத்துவ கல்வியினையும், மருத்துவ சேவைகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவதில் பெரும் புரட்சிகளை செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றியையும், பாராட்டுகளையும் கழக மகளிர் அணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியிருக்கும் பாரத பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் கழக மகளிர் அணி தெரிவித்துக் கொள்கிறது.

உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கோட்பாட்டிற்கு இணங்க நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு அம்மா வழியில் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் ரூ.3 லட்சத்து 431 கோடியில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இட்டு இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இட்டு மேலும் ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பில் தூத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் என தொழில்களை தொடங்கவும் அதன் மூலம் 83 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியும்,

பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுத்த தொழிலாளர்களின் தோழன், தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி தடையில்லா மின்சாரம் வழ.ங்கி சாலை, போக்குவரத்து, தடையில்லா குடிநீர் என கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி தொழில் புரட்சி ஏற்படுத்தி கொண்டிருக்கும் நல்லாட்சி நாயகன் முதலமைச்சர் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கழக மகளிர் அணி நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

காவேரியை மீட்ட கருணைத்தாய் அம்மா, கடைமடை விவசாயிகளுக்கு காவேரி கிடைக்க மனு நீதி சோழன் வழியிலே நீதிமன்றம் சென்று உழவர் வாழ்விலே உயர்வினை ஏற்படுத்த உழைத்த பொன்னியின் செல்வி நமது அம்மா அவர்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்து தந்து டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைத்து புரட்சித்தலைவரின் வரிகளில் உள்ளது போல் கடவுள் எனும் முதலாளி, கண்டு எடுத்த தொழிலாளி விவசாயி, நம் அம்மா என்னும் தெய்வம் கண்டெடுத்த விவசாயி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காவேரி பாயும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து அதன் மூலம் மீத்தேன்,

ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வருவதை தடுக்கவும், விளை நிலங்கள் குறைவதை தடுக்கவும், நிலத்தடி நீர் காக்கவும், விளைநிலங்கள் தொழிற்சாலைகளாகவும், வீட்டுமனைகளாகவும் மாறுவதை தடுத்து நிறுத்தவும், தமிழகத்தின் உணவு உற்பத்தியை உறுதி செய்திடவும் இந்தியாவின் முதல் சிறப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கழக மகளிர் அணி நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஆலயம் தோறும் அன்னதானம் இட்டு சர்வசமய காவலராக விளங்கிய அம்மா நோன்பு காலங்களில்இஸ்லாமிய பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பிற்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்கியும், கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலேம் சென்று வர மானியம் வழங்கியும் அம்மா அவர்களின் வழியில் ஆன்மிகத்தை கட்டிக்காத்து, வரலாற்று சிறப்பு மிக்க காஞ்சி மாநகரில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரத பெருமாள் காட்சி அளிக்கும் விழாவினை சிறப்பாக நடத்தி தமிழர்களின் கட்டட கலைக்கு சான்றாக விளங்கும் ராஜராஜசோழன் ஆயிரத்து பத்து ஆண்டுகளுக்கு முன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் பெருவுடையார் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழாவினை சிறப்பாக நடத்தி பொய் தமிழ் தலைவர்கள் முன்னால் தமிழ் மொழியினை கோபுரத்திற்கு உச்சியில் ஏற்றி உச்சரிக்க செய்த பஞ்சை தமிழன், பாமரனின் தோழன், ஆன்மிக தென்றல், வாழும் ராஜராஜசோழன் முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கழக மகளிர் அணி நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறது.

கருவுக்கும், திருவுக்கும் திட்டம் தந்து தமிழர் குலசாமியாய் திகழ்ந்த அம்மா அவர்கள் கால்நடைகள் மீது கருணை கொண்டு ஆலயங்களில் உள்ள யானைளுக்கும் தெப்பக்காட்டில் சிறப்பு புத்துணர்வு முகாம் அமைத்த அம்மா அவர்களின் வழியில் கால்நடைகளுக்கும் அவசர கால ஊர்தி அமைத்து தந்து வெண்மை புரட்சி ஏற்படுத்த அயல்நாடுகள் சென்று ஆய்வு மேற்கொண்டு தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய 1100 ஏக்கர் பரப்பளவிலான சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை சேலம் தலைவாசலில் அமைக்க திட்டமிட்டு அடிக்கல் நாட்டி அதன் மூலம் கறவை மாடுகள், ஆடுகள், நாட்டின நாய்கள்,

மீன் வளர்ப்பு ஆகியவற்றில் அதிநவீன தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் உருவாக்கும் ஆய்வகம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டுள்ள வாயில்லா ஜீவனுக்கும் வாழ்வளிக்க வழி பல தேடி கருணை ஊற்றாய் கால்நடைகளுக்கு சிறப்பு பூங்கா அமைத்து தந்த முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கழக மகளிர் அணி நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறது.

எளியோருக்காக இயக்கம் கண்ட மன்னாதி மன்னன், மக்கள் திலகம் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். நமதுஇயக்கத்தினை 15 லட்சம் தொண்டர்களாக உருவாக்கி வைத்து தனது வாரிசாக நமது தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்களை அடையாளம் காட்டி சென்ற பின்னர் பல இடர்களுக்கு மத்தியில் இயக்கத்தை கட்டிக் காத்து கழகத்தை ஒன்றரை கோடி தொண்டர்களோடு இந்தியாவின் 3-வது மிகப்பெரிய இயக்கமாக வளர்த்து 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரும்பணி ஆற்றி வந்த அம்மாவின் வழியில் சூது மதி படைத்தவர்கள், சூனியக்காரர்களின் சூழ்ச்சியை முறியடித்து அம்மாவின் அரசையும், கழகத்தையும் கட்டிக் காத்து சோதனைகளை வென்று நடந்து முடிந்த நாங்குநேரி,

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் வெற்றி வாகை சூடி அரசுக்கு நற்சான்றினை பெற்றுத் தந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவித்தும், நடந்து முடிந்த உரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் கழகம் பெருவாரியான வெற்றியை பெறுவதற்கு அயராது உழைத்த கழக தோழர்களுக்கும் நன்றி தெரிவித்து, வரு இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல்களிலும், 2021-ல் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு சாதனைகளை வீடு வீடாக எடுத்து சென்று புரட்சித்தலைவி அம்மா அரசு மீண்டும் அமைந்திட பசி நோக்காது, கண் துஞ்சாது அயராது உழைத்திட கழக மகளிர் அணி சூளுரை ஏற்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.