மதுரை

மாணவச் சமுதாயத்தின் விடிவெள்ளியாக முதலமைச்சர் எடப்பாடியார் திகழ்கிறார் – வி.வி.ராஜன் செல்லப்பா பெருமிதம்

மதுரை

மாணவ சமுதாயத்தின் விடிவெள்ளியாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திகழ்கிறார் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.

மதுரை கேப்ரன் ஹால் உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மார்த்தாண்டம் தாமஸ் தலைமை தாங்கினார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி. வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா 2001-ம் ஆண்டு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். இதுமட்டுமல்லாது மாணவ, மாணவிகளுக்கு மடிகணினியுடன் 14 வகை கல்வி உபகரணங்களை அம்மா அவர்கள் வழங்கினார். அத்திட்டத்தை முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் மொத்த நிதியில் கால் சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் கல்விக்காக இந்த அளவு நிதி ஒதுக்கப்படுவது கிடையாது.

இன்றைக்கு மத்திய அரசிடம் இருந்து ஒரே ஆண்டில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரியை முதலமைச்சர் அனுமதி பெற்று தந்துள்ளார். இதுபோன்ற பல்வேறு திட்டங்களால் இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மாணவர்களாகிய நீங்கள் நன்கு படிக்க வேண்டும். பாலை எடுத்துக் கொண்டால் ஒரு நாள் கூட தாங்காது. ஆனால் அதை பதப்படுத்தி நெய்யாக மாற்றும் போது ஒரு ஆண்டுகள் ஆனாலும் கூட கெடாது.

அதேபோல் நீங்கள் நிதானமாகவும், திறமையாகவும் படித்தால் இந்தியாவிற்கு வழிகாட்டும் மாணவராக நீங்கள் உயர்வீர்கள். உங்கள் வெற்றிக்கு நமது முதலமைச்சர் என்றைக்கும் உறுதுணையாக இருப்பார். எனவே அவர் மாணவ சமுதாயத்தின் விடிவெள்ளியாக திகழ்கிறார்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் சாந்தி சகிலா, ஜான்சிராணி, ஜூலியட் வசந்தகுமாரி, மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.