தற்போதைய செய்திகள்

அம்மாவின் மக்கள் நலத்திட்டங்களை ஒன்றுவிடாமல் நிறைவேற்றி வருகிறோம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதம்

தூத்துக்குடி:-

அம்மாவின் வழியில் அயராது பாடுபட்டு அம்மாவின் அத்தனை மக்கள் நலத்திட்டங்களையும் ஒன்றுவிடாமல் மக்களுக்கு வழங்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் 129 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு கிராமம் கிராமமாக சென்ற புரட்சித்தலைவி அம்மா மாணவ- மாணவிகள் பஸ் வசதி இல்லாமல் 5 மைல் தூரம் நடந்து செல்வதை. கண்டு பஸ்வசதி இல்லாததால் பள்ளிக்கு நடந்து செல்கிறோம் என்ற அவல நிலையை மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்தார் புரட்சித்தலைவி அம்மா .

பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் குழந்தைகளின் கல்வி தங்குதடை இல்லாமல் கற்றிட வேண்டும் என்றால் அவர்கள் பள்ளிக்குச் சென்றுவர அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்க வேண்டும் என்ற சீரிய எண்ணத்தில் இந்தியாவே வியக்கும் அளவில் புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தில படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து சாதனை படைத்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தமிழகத்தில் உள்ள மாணவ மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் சத்துணவு திட்டத்தை தந்து சரித்திர சாதனை படைத்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சீரிய வழியைப் பின்பற்றி புரட்சித்தலைவி அம்மா விலையில்லா மடிகணினி, மிதிவண்டிகள், இலவச நோட்டு புத்தகம், இலவச சீருடைகள் இப்படி 14 க்கும் மேற்பட்ட கல்வி திட்ட உதவிகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தினார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அம்மாவின் வழியில் தற்போது அயராது பாடுபட்டு அம்மா செய்த அத்தனை மக்கள் நலத்திட்டங்களையும் ஒன்றுவிடாமல் மக்களுக்கு வழங்கி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி .

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கடம்பூர் இந்து நாடார் உறவின் முறையின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.டி காளிராஜ், இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் கோவில்பட்டி மாரியப்பன், மாவட்ட மத்திய குற்றங்கள் தலைவர் சுதாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் இளசை தேவராஜ், மாவட்ட இந்து அறநிலைத்துறை தலைவர் மோகன், கடம்பூர் இளைய ஜமீன் எஸ்.வி.எஸ்.பி நாகராஜா, இனாம் மணியாச்சி கூட்டுறவு வங்கி தலைவர் மகேஷ்குமார் கயத்தார் அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட ஆவின் பால் இயக்குனர் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், தூத்துக்குடி மாநகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பி.ஜெகதீஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.