தற்போதைய செய்திகள்

மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்த தடை இல்லை – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

மின்வாரியத்தில் கேங்க்மேன் பணிக்கு எழுத்துத்தேர்வு நடத்த தடை இல்லை என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய கட்டடங்கள் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான பி.தங்கமணி, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர் ஆகிய அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 4,200 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

மேலும் கருமகவுண்டம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக் கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து பரமத்தி-வேலூர் பேரூராட்சியில் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டி சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

அப்போது பள்ளிபாளையத்தில் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்க்மேன் பணியிடம் நிரப்புவதற்காக 90,000 பேர் உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். இவர்களில் 15 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒரு சிலர் உயர் நீதிமன்றம் சென்று கேங்மேன் பணியிடங்கள் நிரப்புவதற்கு தடையாணை பெற்று இருப்பதை போல தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

கேங்மேன் பணிக்கான எழுத்து தேர்வு நடத்துவதற்கு எவ்வித தடையாணையும் கிடையாது. ஒளிவுமறைவின்றி எழுத்துத்தேர்வு நடத்தப்படும். ஏற்கனவே உடல்தகுதி தேர்வில் கலந்துகொண்ட 90 ஆயிரம் பேருக்கும் தனித்தனியாக வீடியோ ஆதாரத்தை மின்வாரியம் எடுத்து வைத்துள்ளது. பிற மாநில மின்துறையினர் கூட தமிழக மின் வாரியத்தை பார்த்து இதே போன்ற தேர்வு செய்யும் முறையை பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கேங்மேன் பணியிடத்திற்கான உடல்தகுதி தேர்வில் சில தொழிற்சங்கத்தினரின் தூண்டுதலின்பேரில் கலந்துகொள்ளாமல் போன ஒரு சிலர் தான், தற்போது இதனை நிறுத்துவதற்காக நீதிமன்றம் சென்றுள்ளனர். ஒளிவுமறைவின்றி கேங்மேன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே எந்தவித விசாரணையையும் சந்திக்க மின்வாரியம் தயாராக உள்ளது.

அதேபோல, ஏற்கனவே நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் மின்சார வாரியம் ஒளிவு மறைவின்றி செயல்படுகிறது. வேண்டுமென்றே ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடுகளுக்கு நடந்ததை உடனடியாகக் கண்டறிந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, அம்மா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டாஸ்மாக் ஊழியர்கள் தினமும் வசூலாகும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு லாக்கர் வசதி ஏற்படுத்தி தரப்படும். இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் அந்த வசதி டாஸ்மாக் கடைகளில் ஏற்படுத்தி தரப்படும். தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதால் வருகின்ற கோடைகாலத்தில் 17 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு மின் தேவை ஏற்பட்டாலும் அதனை வழங்க மின்சார வாரியம் தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.