சிறப்பு செய்திகள்

டெல்லியில் மத்திய அமைச்சர்களுடன் அமைச்சர் எஸ்பி.வேலுமணி சந்திப்பு – தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரிக்கை

டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

புதுடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாகக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேரில் சந்தித்தார். அப்போது 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ 2029.22 கோடி செயலாக்க மானியத் தொகை மற்றும் ரூ 4345.47 கோடி அடிப்படை மானியத் தொகையை விடுவிக்கக் கோரிய தமிழக முதலமைச்சரின் கடிதத்தை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமரை நேரில் சந்தித்து, மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்,தமிழகத்தின் ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ 2,939 கோடி 2 வது தவணைத்தொகை, தொழிலாளர் ஊதியம்,கட்டுமானம் மற்றும் நிர்வாக செலவினம் ஆகிய தலைப்பின் கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ 609.18 கோடியை விடுவிக்கக் கோரிகோரிக்கை மனுவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.