சிறப்பு செய்திகள்

மனிதரில் புனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் – துணை முதல்வர் புகழாரம்

சென்னை

மனிதரில் புனிதராக வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. அவர் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் என்று நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் 12.2.2020 அன்று நடைபெற்ற புரட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் கே.மகாலிங்கம் எழுதிய ‘சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று முதல் பிரதியை வெளியிட்டு ஆற்றிய உரை வருமாறு:-

எனக்கு முன்னாடி பேசிய அரும்பெரும் தலைவர்கள் அனைவரும், இங்கு பேசும் போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இனிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கருத்துக்களையும், இந்த இயக்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துடைய அடித்தளம் என்ன என்பதையும், இந்த நிறுவனத்தை உருவாக்கிய புரட்சித்தலைவரை பற்றியும், அந்த பொறுப்பினை ஏற்றுக் கொண்ட அம்மா அவர்கள் அந்த இயக்கத்தை காப்பாற்ற செய்த தியாகங்கள் பற்றியும் மிக அழகாக இன்றைக்கு இருக்கின்ற தலைமுறை அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு கருத்துக்களை எங்களை போன்ற இன்று பொறுப்பில் உள்ளவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சொன்னார்கள்.

அம்மா அவர்கள் சொன்னார் இந்த இயக்கம் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அந்த நிலை உருவாகுவதற்கு நீங்கள் ஆற்றிய அன்புமொழிகள், அறிவுரைகள், கடந்த கால வரலாறு இருபெருந்தலைவர் இந்த கழகத்திற்கு செய்த தியாக வரலாறு என்பதை பற்றியெல்லாம் எங்கள் மனதில் நாங்கள் இருக்கின்ற காலம் வரை இருக்கும் என்பதையும், இங்கு இவைகளெல்லாம்

அறிஞர் அண்ணாவின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்ற இதயக்கனி ஏழை எளிய மக்களின் உள்ளங்களில் ஒளி வீசும் அன்பு தீபம் தீயசக்திகளை தமிழக அரசியல் களத்திலிருந்து விரட்டியடித்த வீரத் திருமகன். 1977 முதல் 1987-ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்து கழகத்தை முன்னெடுத்துத் தந்த வெற்றித்திலகம், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்,
நண்பர்களுக்கு அன்புப் பெட்டகம், ஏழைகளுக்கு கருணை வள்ளல், மாணவச் செல்வங்களுக்கு “அன்னமிட்ட கை” தாய்க்குலத்திற்கு “எங்கள் வீட்டுப் பிள்ளை” ஆட்சியாளர்களில் “ஆயிரத்தில் ஒருவன்”மாட்சிமை மிக்க “மன்னாதி மன்னன்”

வணங்குவோருக்கு அருள் பொழியும் “ஸ்ரீ முருகன்” இணங்குவோர்க்கு உதவுகின்ற “இதயக்கனி” தவறு செய்வோரை நடுங்க வைத்த “அலிபாபா தமிழ் இனத்தின் மனம் நிறைந்த “ஆனந்த ஜோதி” “நாளை நமதே” என நம்பிக்கையூட்டிய “உரிமைக்குரல்”
உழைக்கும் கரங்களே உயர்வு பெறும் என உரைத்த உண்மைத் தலைவன் சமூக விரோதிகளை வளைத்துப் பிடித்த “வேட்டைக்காரன்” சரித்திரத்தில் இடம் பிடித்த “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” அவர்தான், நானிலம் போற்றும் நமது தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. உலக சரித்திரத்தில், மக்களின் அபரிமிதமான நம்பிக்கையையும் அன்பையும் பெற்று போட்டியிட்ட தேர்தலில் படுத்துக் கொண்டே ஜெயித்த ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தான்.

1967-ம் ஆண்டில், துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்திலே துப்பாக்கிக் குண்டுக்கும் இடமளித்து, மருத்துவமனையில் படுத்துக் கிடந்த நிலையில், தொகுதிக்கே செல்லாமல் தன்னுடைய தொகுதியை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. அதேபோல 1984-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்த நேரத்திலும் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று சகாப்தம் படைத்தவர், எம்.ஜி.ஆர்.. தமிழகத்தின் முதலமைச்சராக 6 முறை பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை, அரசியல் வான் உச்சிக்கு அழைத்துச் சென்று பெருமைபடுத்தியவர் எட்டாவது வள்ளலான பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ஆவார்.

கடலூரில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அம்மா அவர்களை அரசியலில் அறிமுகப்படுத்தி உரையாற்ற வைத்து, மக்களின் மகத்தான ஆதரவைப் பெறச் செய்து எதிர்க்காலத்தில் தலைமை ஏற்று தமிழகத்தை வழி நடத்த இருப்பவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் என்று முன்னோட்டம் தந்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை முழுவதும் மனித நேயச் செயல்களும், மனிதாபிமானச் சேவைகளும் நிறைந்திருக்கின்றன என்பதை அவரது வாழ்க்கையை அலசி ஆராயும் ஒவ்வொருவரும் எடுத்துக்கூறி வருவதை நாம் நன்கு அறிவோம். அதில் ஒரு நிகழ்ச்சியை மட்டும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தனது உயிருக்கும் மேலாக மதித்து போற்றி வணங்கிய தனது தாயின் மறைவிற்குப் பின்னர் தனது வீட்டில், அவரது திருவுருவப்படம் ஒன்றை வைத்து, அதன் முன்பு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, புனித அன்னையை வணங்கி விட்டு பணிகளை தொடங்குவதுதான் வள்ளல் புரட்சித்தலைவரின் வாடிக்கை. அந்த இருக்கையில் அவரை தவிர யாரும் அமர மாட்டார்கள். ஆனால், ஒரு முறை, பொன்மனச் செம்மலின் உதவியை நாடி வந்த பெண்மணி ஒருவர், தனது சின்னஞ் சிறு குழந்தையுடன் அவரது இல்லத்திற்கு வந்தார். தலைவர் அப்போது இல்லத்தில் இல்லாத நேரம். எனவே, அவரது வருகைக்காக காத்திருந்த அப்பெண்மணி, அன்னை சத்யா திருவுருவப்படத்திற்கு முன்பு போடப்பட்டிருந்த இருக்கையில் அறியாமல் உட்கார்ந்து கொண்டு, கண்ணயர்ந்து விட்டார்.

சற்றுநேரம் கழித்து வந்த புரட்சித்தலைவர் அப்பெண்மணியைக் கண்டார். “கோபத்தில் என்ன செய்யப்போகிறாரோ” என்று அருகிலிருந்தவர்கள் அஞ்சி நடுங்கினர். ஆனால், அவர்களது எண்ணத்திற்கு நேர்மாறாக, அவர் அப்பெண்மணி அமர்ந்திருந்த இருக்கைக்கு மேல் இருந்த, மின்விசிறியை இயங்கச் செய்தார். அவரது தூக்கத்தை தடை செய்யாமல் அமைதியாக தூங்க வைத்தார். பிறகு திடுக்கிட்டு எழுந்த பெண்மணி, தன் தவறுக்காக மனம் வருந்தினார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரோ குடிக்கத் தண்ணீர் கொடுத்து அவரது பதட்டத்தை தணித்து அவர் கேட்ட உதவியை கொடுத்து அனுப்பினார். இத்தகைய மனித நேயத்தின் சின்னமாக விளங்கியவர் நமது தலைவர் எம்.ஜி.ஆர்.. இவ்வாறு கண்கள் விரியத்தக்க, இதயம் நிறையத்தக்க எண்ணற்ற சம்பவங்களை, அவரது பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தகைய குணக்குன்றாக விளங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடைய பெருந்தன்மைமிக்க செயல்களைத்தான் நண்பர் கே.மகாலிங்கம் தனது நூலில், படிப்பவர்கள் பிரமிக்கத்தக்க அளவிற்கு எடுத்துரைத்திருக்கிறார். பொன்மனச் செம்மல் குறித்து, அவருடன் இருந்தவர்களும், நெருங்கிப் பழகியவர்களும் தங்களது அனுபவங்களையும், தாங்கள் ரசித்து மகிழ்ந்ததையும், தொகுத்து பல்வேறு புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவ்வாறு பல புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் “சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்” என்ற இந்த நூலுக்கு என்று தனிச் சிறப்புகள் உள்ளன.

ஏனென்றால் பாரத ரத்னா எம்.ஜி.ஆரிடம் 1972 முதல் 15 வருடங்கள் அவருடைய நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்த கே.மகாலிங்கத்தால் உருவாக்கப்பட்ட நூல் இது. அதனால் இதில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள், தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை.

1987-ம் ஆண்டுவரை பொன்மனச் செம்மல் இம்மண்ணை விட்டு நீங்கும் வரை அவருடனே இருந்து, அவரைப் பற்றி நன்கு அறிந்தவர் மகாலிங்கம். அதனால்தான், இதுவரை யாரும் அறிந்திராத பல்வேறு புதிய தகவல்களை, வியக்கத்தக்க சம்பவங்களை, இந்நூலில் திறம்பட விவரித்துள்ளார்.

காலத்தை வென்ற காவியத் தலைவரான புரட்சித்தலைவரின் ஏழைகளுக்கு இரங்கும் மனித நேயத்தை, தாய்மார்களின் தவிப்பை நீக்கும், தன்னிகரில்லாத கருணையுள்ளத்தை, மாண்புமிக்க மனித நேயத்தை, கழகத்தின் அடிமட்ட தொண்டரைக்கூட பாசத்தால் அரவணைக்கும் அன்பு நெஞ்சத்தை, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணா அவர்களின் பொன்மொழிகளை மனதில் கொண்டு, எதிர்க்கட்சித்ள தலைவர்களை மதித்து பேசும் பண்பட்ட பாங்கினை, கொடுத்துச் சிவந்த கரங்களால் அள்ளித் தருகின்ற வள்ளல் குணத்தை, மாநிலத்தின் உரிமைகளை மீட்க துடிக்கும் அவரது உரிமைக் குரலை, பார்ப்போர் பரவசமடையக்கூடிய வசீகரப் பார்வையை, என, அவரது பன்முகத் தன்மையை படிப்பவர்கள் உணர்ந்து வியக்கும் வண்ணம் விவரித்து இருக்கிறார் மகாலிங்கம்.

புரட்சித்தலைவரின் புகழுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்துள்ள இந்நூல், இளைய தலைமுறையினரும், வருங்காலச் சந்ததியினரும் எளிதில் படித்து அறிந்து கொள்ளக்கூடிய வகையில் படைக்கப்பட்டுள்ளமைக்காக மகாலிங்கத்தை வெகுவாகப் பாராட்டுகிறேன். புரட்சித்தலைவரின் புகழைப் பரப்புவது ஒன்றையே தன்னுடைய லட்சியமாகக் கொண்டு, தொண்டாற்றி வரும் கே.மகாலிங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல், தமிழக புத்தக வரலாற்றில் முதன்மையான இடத்தைப் பெறும் என்று நான் நம்புகிறேன். அவருடைய தொண்டு மென்மேலும் தொடர வேண்டும், மேலும் பல புதிய படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, சிறப்பான அவருடைய முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டு, எனது உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.