தற்போதைய செய்திகள்

உள்ளாட்சியில் விரைவில் நல்லாட்சி மலரும் – அமைச்சர் க.பாண்டியராஜன் பேட்டி

திருவள்ளூர்

மக்கள் என்றுமே கழக அரசின் பக்கம் தான் இருக்கிறார்கள். எனவே உள்ளாட்சியில் விரைவில் நல்லாட்சி மலரும் என்று ஆவடியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆவடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் ஏதாவது ஒன்றை செய்து தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்த போதிலும், நேற்று மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் மீண்டும் ஒரு மனுவை அளித்துள்ளது. அவர்களின் பரிதாபத்திற்குரிய செயலாகும். மக்கள் அவர்களை பரிதாபமாகத் தான் பார்க்கிறார்கள், மக்கள் என்றுமே கழக அரசின் பக்கம் தான். அதனால் தான் நேற்று கூட இரண்டாவது கட்டமான வேட்பாளர் பட்டியலை கழகம் வெளியிட்டுள்ளது.

தேர்தலை சந்திக்க எந்தவித பயமும் இல்லை. அம்மாவின் ஆசியும், மக்களுடைய ஆதரவு எப்போதும் கழகத்திற்கு உண்டு. இதன் மூலம் உள்ளாட்சியில் நல்லாட்சி விரைவில் மலரும். 8 கட்சிகளின் கூட்டணியுடன் கழகம் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறது. கூட்டணிக் கட்சிகளை எங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் சமத்துவத்துடன், சமமாகவும் தான் பார்க்கிறார்கள். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.