சிறப்பு செய்திகள்

தமிழக பட்ஜெட் : 10-வது முறையாக துணை முதலமைச்சர் தாக்கல் செய்கிறார்

சென்னை

சட்டப்பேரவை கூட்டம்  காலை 10 மணிக்கு தொடங்குகிறது. துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஜனவரி 9-ந்தேதி வரை பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

தமிழக அரசின் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டில் இருந்து இதுவரை 9 முறை பட்ஜெட்டைஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இன்று 10-வது முறையாக அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கடந்த 2019 20 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 117 கோடியே 11 லட்சத்துக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 400 கோடியாக இருக்கும் என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.14,314 கோடியே 76 லட்சமாகவும், நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியே 36 லட்சமாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 438 கோடியே 51 லட்சத்துக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கடந்த
பட்ஜெட்டில் கணிக்கப்பட்டிருந்தது. இதையொட்டியே இந்த ஆண்டு பட்ஜெட் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில்  தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால் விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், அரசு ஊழியர்களை கவரும் வகையில் சலுகைகள், அறிவிப்புகள் இடம் பெறக் கூடும். சேலம் தலைவாசலில் கடந்த 9-ந்தேதி நடைபெற்ற ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் காவேரி டெல்டா மாவட்டங்கள்,
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.