தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக்கை 100 சதவீதம் ஒழிக்க அரசு நடவடிக்கை – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

சென்னை

பிளாஸ்டிக்கை 100 சதவீதம் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

சென்னை சாலிகிராமத்தில் மஹிந்திரா கார் நிறுவனம் சார்பில் குறைந்த தண்ணீர் செலவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் கார் சுத்தம் செய்யும் முறையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருபண்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் எப்போதுமே அரசு கொண்டு வரும் திட்டத்தை எதிர்க்க தான் செய்வார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னது எதுவும் இதுவரை நடக்கவில்லை. முதல்வரை பொறுத்தவரை பிரதமரிடம் அனுமதி வாங்காமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை முதலமைச்சர் அறிவித்திருக்க மாட்டார். முதல்வர் அறிவித்த திட்டங்கள் எல்லா இடங்களிலும்
நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதுவும் நிறைவேற்றப்படும்.

அரசு நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தமிழகம்- கேரளா நதிநீர் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே கேரள முதல்வரை சந்தித்து பேசியுள்ள நிலையில் மீண்டும் கேரள முதல்வர் விரைவில் தமிழகம் வர இருக்கிறார். அந்த
சந்திப்பில் மேற்கு தொடர்ச்சி மலையில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்கக்கூடிய நடவடிக்கை குறித்து பேசப்பட இருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முதலில் திமுக ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. அதனை அதிமுக ஆட்சி தடுத்து நிறுத்தி இருக்கிறது. எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடையாது. காலநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்ட அறிக்கை விரைவில் தமிழில் மொழிபெயர்த்து பொதுமக்கள் கருத்திற்காக வெளியிடப்படும். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் ஒரு சில இடங்களில் இருக்குமே தவிர முன்னர் போல்அதிகமாக பயன்படுத்தப் படுவதில்லை பிளாஸ்டிக்கை 100 சதவீதம் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.