தற்போதைய செய்திகள்

திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க இடம்தேர்வு – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆய்வு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில், திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுமக்கள் காத்திருப்பு கூடத்தை நேற்று திறந்து வைத்து அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படவுள்ள இடத்தினை ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழக அரசு, அம்மா அவர்கள் ஆட்சியின் போது, பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்திடவும், வசதி படைத்தவர்கள் பெறும் உயர்தரமான சிகிச்சையினை பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இன்றி பெற்றிட செயல்படுத்திய அனைத்து திட்டங்களும் தற்போது மிகுந்த கவனத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் காரணமாக சுகாதார மருத்துவ சிகிச்சை அளிப்பதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் ஏற்கனவே 48 மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் புதிதாக நமது மாவட்டம் உட்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க அனுமதி பெற்றுத் தந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு திண்டுக்கல்லுக்கு வருகை தரவுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையுடன் திண்டுக்கல் கிழக்கு வட்டம்அடியனூத்து கிராமத்தில் 8.6.10 எக்டேர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. அந்தப் பகுதியில் மருத்துவக்கல்லூரிக்கு தேவையான அடிப்படைத் தேவைகளான சாலை வசதி மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காகசம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதலமைச்சர்கலந்துகொள்ள உள்ள புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல்நாட்டு விழா நடைபெறும் இடம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில்
உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவியாக அவர்களது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்கள்
சிகிச்சை பெறுபவர்களுடன் தங்குவதில் ஏற்படும் அசௌகரியம் மற்றும் இடர்பாடுகளை தவிர்ப்பதற்காகவும்,
அவர்கள் தங்கி சிகிச்சை பெறுபவர்களை பராமரித்திட வேண்டும் என்பதற்காக உதவியாளர்கள் தங்கும் அறை கட்டும்
திட்டம் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.