தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 1655 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

நாகப்பட்டினம்

தமிழ்நாடு முழுவதும் 1655 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆக்கூர், திருக்கடையூர், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வானாதிராஜபுரம், மல்லியம் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குத்தாலம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இ்ந்த ஆய்வின் போது உணவுத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் சுதாதேவி, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் பி.நாயர் ஆகியோர் உடனிருந்தனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்ட அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்ததாவது:-

“புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறப்பாக செல்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயிகளை பாதுகாக்கிற அரசு அம்மாவின் அரசு. டெல்டா பகுதியில் விளைந்துள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்திடும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 1655 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

டெல்டா மாவட்டங்களில் இதுவரை 1345 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 310 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 5,40,195 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ரூ.1021.551 கோடி வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிமாற்ற முறையில் வரவு வைக்கப்பபட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து புகார் ஏதுமின்றி நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மொத்தம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் குறித்த ஏதெனும் புகார்கள் இருப்பின் தலைமையிட தொலைபேசி எண்கள் 044-26424560 மற்றும் 044-26422448 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் பி.வி.பாரதி(சீர்காழி), வி.ராதாகிருஷ்ணன்(மயிலாடுதுறை), கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆசைமணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.