தற்போதைய செய்திகள்

தூசி கிராமத்தில் புதிய கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசியில் கால்நடை மருத்துவமனையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பி.ரத்தினசாமி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் விமலா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முகமது காலித், மாவட்ட துணை இயக்குனர் பாரதி, உதவி இயக்குனர் ஆர்.பி.ஜான்சாமுவேல், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் த.ராஜீ, மாவட்ட இலக்கிய அமைப்பாளர் மகேந்திரன், வட்டாட்சியர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நத்தகொள்ளை, குரங்கணில்முட்டம், பல்லாவரம், அப்துல்லாபுரம், கணிகிலுப்பை, வளதோட்டம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் இந்த கால்நடை கிளை மருத்துவமனை வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையில் செயல்படும். இந்த மருத்துவமனையில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி பணிகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.