இந்தியா மற்றவை

ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ. காவல் வரும் 5 ஆம் தேதி வரை நீடிப்பு…

புதுடெல்லி:-

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வரும் 5 ஆம் தேதி வரை சிபிஐ காவலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் முதலீட்டை பெற அனுமதி அளித்த குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.

அவரது சிபிஐ காவல் நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டு வருவதால் கடந்த 13 நாட்களாக காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.இந்த நிலையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிதம்பரதை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், சட்டப்படி அவரை நீதிமன்ற காவலில் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், சிதம்பரத்திற்கு 74 வயது ஆவதால், பாதுகாப்பு கருதி வீட்டுச்சிறையில் வைக்கலாமே தவிர திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் , வீட்டுச் சிறை என்பது அரசியல் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பு என்று சுட்டிக்காட்டினர். ஏன் இந்த கோரிக்கைகளை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என்றும் சிதம்பரம் தரப்பினருக்கு கேள்வி எழுப்பினர்.அதனைத் தொடர்ந்து சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையையும் வரும் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே இடைக்கால ஜாமீன் கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்த மனு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. ஒருவேளை ஜாமீன் நிராகரிக்கப்பட்டாலும், வரும் 5 ஆம் தேதி வரை சிதம்பரம் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

சிபிஐ காவல் என்றால், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள ஒரு அறையில் சிதம்பரம் இருந்து கொள்ளலாம். ஆனால் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டால் ஆசியாவிலேயே பெரிய சிறைகளில் ஒன்றான திகார் சிறையில், மற்ற கைதிகளுடன் தான் சிதம்பரம் இருக்க முடியும்.