தற்போதைய செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழாவை நாடுபோற்றும் வகையில் சிறப்பாக கொண்டாடுவோம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறைகூசல்

மதுரை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை நாடு போற்றும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறைகூவல் விடுத்துள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் மதுரை அருணாச்சலம் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட கழக துணை செயலாளர் சி.தங்கம் தலைமை தாங்கினார்.

மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கழக தேர்தல் பிரிவு இணை செயலாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

மக்களால் நான், மக்களுக்காக நான், உங்களால் நான், உங்களுக்காகவே நான் என்று தன் இறுதி மூச்சு வரை தமிழ் மக்களுக்காக உழைத்த தங்கத் தலைவி புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆணையிட்டுள்ளனர்.

மதுரை என்றாலே அதிமுக கோட்டையாகும். மதுரை மண்ணில்தான் புரட்சித்தலைவரும், அவரது அரசியல் வாரிசான புரட்சித்தலைவி அம்மா அவர்களும் பல்வேறு வரலாற்று முடிவுகள் எடுத்து வெற்றி கண்டனர். அன்று முதல் இன்று வரை கழகத்தின் எக்கு கோட்டையாகும்.

அப்படிப்பட்ட இந்த மதுரை மண்ணில் நாடே போற்றும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும். புரட்சித்தலைவி அம்மாவிற்கு பிள்ளைகள் கிடையாது. ஆனால் ஒன்றரை கோடி தொண்டர்களையும் தன் பிள்ளைகளாக நினைத்து உழைத்து நம் இயக்கத்திற்கு பெருமை சேர்த்தவர்.

புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்குப் பின் அம்மாவின் வழியில் இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக வழிநடத்தி அம்மாவிற்கு புகழ் மேல் புகழ் சேர்த்து வருகின்றனர். இன்றைக்கு ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் மதுரைக்கு ஆயிரம் கோடி அளவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மதுரை இன்னும் 2 ஆண்டுகளில் எழில்மிகு நகரமாக உருவாகும்.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் அனைத்திலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்த 100 வார்டுகளுக்கு கழகத்தின் சார்பில் போட்டியிட 1000 பேர் விண்ணப்பம் தெரிவித்துள்ளனர். நீங்களெல்லாம் வார்டுகளில் அம்மாவின் பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். அன்னதானம், எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் நலத்திட்ட உதவிகள், கண்தானம், ரத்ததானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். குறிப்பாக மக்களை ஈர்க்கும் வகையில் அம்மாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும். இதுபோன்று பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதின் மூலம் எதிரிகளை நாம் எளிதாக வீழ்த்த முடியும்.

கடந்த ஆண்டு வரை திமுக நிலைமை வேறு, தற்போது உள்ள நிலைமை வேறு. நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை திசை திருப்பினர். ஆனால் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் எடுபடவில்லை. நமக்கும் திமுகவுக்கும் உள்ள ஓட்டு சதவீதம் மிக குறைந்த அளவுதான். அது போல் குடியுரிமை சட்டத்தை பற்றி ஒரு தவறான பிரச்சாரத்தை திமுக செய்தது. சிறுபான்மை இன மக்களுக்கு அதிக திட்டங்களை செய்தது அதிமுக தான்.

முஸ்லிம்கள் மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் செல்ல ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல ஆண்டுக்கு ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் ரூ.750 கோடி அளவில் வக்பு வாரிய சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டது. அதை மீட்டுத் கொடுத்தது அம்மாவின் அரசு. அதேபோல் புனித ரமலான் நோன்புக்கு 5350 டன் அரிசி வழங்கப்பட்டது. இதன் மூலம் 3,000 பள்ளிவாசல்கள் பயன்பெற்றுள்ளன.

வக்பு வாரிய நிர்வாகத்திற்கு 3 கோடி ரூபாய் மானியம், அதேபோல் ஹாஜிகளுக்கு 20,000 ரூபாய் மாதந்தோறும் வழங்கி வருவதோடு சிறுபான்மையின மக்களுக்கு காவல் அரணாக முதலமைச்சர் உள்ளார். சிறுபான்மை இன மக்களின் மீது ஒரு தூசு படாமல் காத்து வருகிறார்.

தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு ஏதாவது ஒரு சாதனை திட்டத்தை செய்தது உண்டா? சிறுபான்மையின மக்களை ஓட்டுக்காக தான் ஸ்டாலின் பயன்படுத்துவாரே தவிர அவர்களுக்கு எதுவும் செய்யமாட்டார். இதை எல்லாம் சிறுபான்மை மக்களிடம் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். இன்றைக்கு நமது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் நம்மைப்போன்ற தொண்டர்கள் நம்பித்தான் தேர்தல் பணிகளை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் திமுக அப்படி இல்லை. வடநாட்டைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோரை நம்பி தேர்தல் பணியை திமுக செய்து வருகிறது.அண்ணா கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் உருவாக்கிய திராவிட இயக்கத்தை இன்றைக்கு வட மாநிலத்தை சேர்ந்தவரிடம் ஸ்டாலின் அடகு வைத்துவிட்டார்.

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்து மத்திய அரசு விருது கொடுத்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமையாகும். அதை கூட பொறுக்க முடியாத ஸ்டாலின் விருது கொடுப்பவர்களை அடிப்பேன் என்று கூறுகிறார். இது போன்ற ஒரு விருது திமுக ஆட்சியில் கிடைத்தது உண்டா? ஆனால் திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கு மோசமான மாநிலமாக தமிழகம் உள்ளது என்ற மோசமான பெயரை தான் பெற்றார்கள்..

இரண்டு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து இனிமேல் விளைநிலங்களை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு அனுமதிக்க முடியாது என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்காக தமிழகமே முதலமைச்சரை வாழ்த்தும் போது ஸ்டாலினோ அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முதலமைச்சரை விமர்சனம் செய்து வருகிறார். இதே மீத்தேன் திட்டத்திற்கு முதன்முதலில் கையெழுத்திட்டது திமுக தான் என்பதை விவசாய மக்களுக்கு நன்கு தெரியும. ஸ்டாலினின் பிரச்சாரம் இனிமேல் எடுபடாது. புரட்சித்தலைவி அம்மா ஒரு தீர்க்கத்தரிசி. அவர் எது சொன்னாலும் தெய்வ வாக்காக தான் இருக்கும். சட்டமன்றத்தில் எனக்கு பின்னால் இந்த இயக்கம் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் என்று கூறினார. நிச்சயம் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கழகம் தான் அமோக வெற்றி பெறும். தொண்டர்களாகிய நீங்கள் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்.

இந்த ஆட்சி மூன்று நிமிடம் தாங்காது என்று எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இன்றைக்கு மூன்று ஆண்டு முடிந்து வருகின்ற 17-ந் தேதி நான்காண்டு தொடக்க விழாவினை அம்மாவின் அரசு காண இருக்கிறது. இந்த நல்ல வேளையில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் 100 சதவீத வெற்றியை பெற்று அம்மாவின் பிறந்தநாள் பரிசாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கும் வழங்கும் வண்ணம் இரவு பகல் பாராது களப்பணியாற்ற நீங்கள் சூளுரை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஆர்.ராஜாங்கம், அண்ணாதுரை, அமர்நாத், சுந்தரராஜன், அனைத்துலக எம்.ஜி.ஆ.ர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் துணை மேயர்கள் நவநீதகிருஷ்ணன் திரவியம், கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், கழக மாணவர் அணி இணை செயலாளர் குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் எஸ்.டி.ஜெயபாலன், சோலை ராஜா, இந்திராணி, தமிழ்ச்செல்வன், ஜமால் மொய்தீன், அரவிந்தன், மாணிக்கம், பகுதி கழக செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயவேலு, அண்ணா நகர் முருகன், பரவை ராஜா, பைக்காரா கருப்பசாமி, கண்ணன், மகேந்திரன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.