சிறப்பு செய்திகள்

ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு உதவிட தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் – துணை முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை:-

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்கு உதவிட தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் அக்சயா பாத்ரா அறக்கட்டளை காலை உணவுத் திட்டத்திற்கான சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா விழாவில் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-

சாதி, மத வேறுபாடு இன்றி, மனித இன மேம்பாடு ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு, ஏழை, எளிய மக்கள் பசியாற, அன்னம் அளிக்கும் அருஞ் சேவை ஆற்றிவரும், அட்சய பாத்ரா அறக்கட்டளையின் சார்பில், சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவச் செல்வங்களுக்கு, காலை உணவை வழங்கிடும் உன்னத நோக்கத்தை நிறைவேற்றிட, சிறந்த நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் பங்கேற்கின்ற நல்வாய்ப்பை எனக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தர்மம் செய்வதும், தானம் அளிப்பதும், மனித வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக ஆக்கும் அருஞ் செயல்கள் ஆகும்.

“தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்று பாடினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. தானம் என்பது, பிறருக்குத் தேவையானவற்றை அவர்கள் கேட்டோ, அல்லது அடுத்தவர் அவர் நிலை பற்றிக் கூறி அறிந்த பின்னரோ, தருவதாகும். இவ்வாறு கொடை அளிப்பது ஒரு மன்னனின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் கடமையும் ஆகும் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

தானத்தில், அன்னதானம், வித்யா தானம், தண்ணீர் தானம், பொருள் தானம், பண தானம், கண் தானம், ரத்த தானம், உடலுறுப்பு தானம் என பல வகையான தானங்கள் இருக்கின்றன. இவற்றுள் தலையாய தானமாக, தானங்களிலேயே சிறந்த தானமாக, அன்னதானமே விளங்குகிறது. ஏழைகளுக்கும், ஏதுமற்ற அனாதைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும் செய்யும் அன்னதானம் என்பது, அஸ்வமேத யாகம் செய்த அளவிற்கு நற்பலன்கள் அளிக்கவல்லது என்று புராண இதிகாசங்கள் தெரிவிக்கின்றன.

உணவு உண்பது ஒன்றில் மட்டும்தான், “போதும்” என்ற வார்த்தை மனதார ஒருவரின் வாயிலிருந்து வரும். மண், பொன், பொருள் என வேறு எதுவாயினும் கொடுக்கக் கொடுக்க, இன்னும் வேண்டும், வேண்டும் என்ற எண்ணம் வருமே ஒழிய, போதும் என்ற எண்ணம் ஒருபோதும் வருவதில்லை. ஆனால், ஒருவர் உணவு உண்டு பசியாறிய பின்பு, இலையில் அமிர்தமே பரிமாறினாலும், அவர், “வேண்டாம்!”, “போதும்!” என்று சொல்லிவிடுவார். அன்ன தானத்திற்கு அப்பேர்ப்பட்ட சிறப்பு உள்ளது.

அன்றொரு நாள், அகிலத்தைக் காக்கும் திருமாலின் அவதாரமான பகவான் ஸ்ரீகிருஷ்ணர், துவாரகையில், பக்தியில் ஆழ்ந்திருந்தார். அதைக் கண்டு வியப்புற்ற, அருகிலிருந்த ருக்மணிதேவியின் மனதில், ஒரு பெருத்த கேள்வி எழுந்தது. “உலக உயிர்கள் எல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குகின்றன. ஆனால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யாரை வணங்குகிறார்?” என்பதே அந்தக் கேள்வியாகும். தனது மனதில் எழுந்த இந்த கேள்வியை, பகவானிடம் நேரில் கேட்டார் ருக்மணி தேவி. அதற்கு ஸ்ரீகிருஷ்ணர், ஆறு பேரை, தான் வணங்குவதாக பதில் உரைத்தார். மனிதர்கள் வாழும் பூமியில், நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்.

1. தினமும் அன்னதானம் செய்வோர்,
2. தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,
3. வேதம் அறிந்தவர்கள்,
4. சஹஸ்ர சந்திர தரிசனம் செய்தோர்
அதாவது சதாபிஷேகம் செய்து கொண்டோர்.
5. மாதாந்தோறும் உபவாசம் இருப்போர்,
6. பதிவிரதையான பெண்கள்,இந்த ஆறு பேரை நான் வணங்குகிறேன் என்று பதில் கூறினாராம் கிருஷ்ண பரமாத்மா.
தான் வணங்கத்தக்கவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அன்னதானம் செய்பவரே என்று பகவான் கிருஷ்ணரே தெரிவித்துள்ளார்.

கொடை வள்ளல் கர்ணன் ஒரு முறை பசியோடு வந்த ஒருவருக்கு தன்னையும் அறியாமல் அன்னதானம் செய்யும் இடத்தை ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டியதே, கர்ணனுக்கு சொர்க்கத்தின் வாயில் திறந்திடக் காரணமாய் அமைந்தது என மகாபாரதக் கதை ஒன்று கூறுகிறது.

ஏழைகளுக்கு வயிற்றுப் பசிக்கு உணவளிப்பதைவிட சிறந்த யாகம் எதுவும் கிடையாது என்கிறது ராமாயணம்.
“இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர்” என்று நமது முன்னோர்கள் அன்னதானம் செய்பவர்களின் மேன்மையை எடுத்துக் கூறினார்கள்.

உயிர் வாழ உணவு அவசியம், அந்த உணவைத் தானமாகத் தருபவர்கள் அவர்களுக்கு உயிரையே தருகிறார்கள்.
“மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”என்கிறது மணிமேகலைக் காப்பியம். அன்னதானத்தின் பெருமையை திருவள்ளுவரும் எடுத்துக் கூற தவறவில்லை.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி அதாவது, ஒருவரது பசியைத் தீர்ப்பது என்பது, அறம். அவ்வாறு அடுத்தவர் பசியை தீர்த்தால், அது அவருக்கு பிற்காலத்தில் சேமித்து வைப்பது போலானது, என்கிறார் திருவள்ளுவர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுரைத்த, அருட்பெரும் ஜோதி திருவருட்பிரகாச வள்ளலார், சத்திய தருமசாலை தொடங்கியதும், காஞ்சி பெரியவர், பல ஆண்டுகளுக்கு முன்பே பிடி அரிசித் திட்டம் என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் அன்னதானத்தின் பெருஞ்சிறப்பைக் கருத்தில் கொண்டே! தனக்கு கிடைத்த சிறிய அளவு அரிசியைக் கூட குருவிகளுக்கு இரையாக வழங்கிய மகாகவி பாரதியார், மனிதர்கள் உணவின்றி அவதியுறுவதைக் கண்டு வெகுண்டெழுந்து,தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று முழங்கினார்.

இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான், பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், இளவயதில் தான் சந்தித்த பசித் துன்பத்தை, இனி எவரும் அனுபவிக்கக்கூடாது என்றும் பசியின் காரணமாக பள்ளி செல்லாமல் இருத்திடக் கூடாது என்றும் உயர்ந்த எண்ணத்துடன் சிந்தித்து, இந்தியாவில் வேறெங்கும் இல்லாத திட்டமான சத்துணவுத் திட்டத்தினை 1982-ம் ஆண்டு தொடங்கினார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவரை பின்பற்றி, அரியணை ஏறியஅம்மா அவர்கள், சத்துணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, சத்துணவை மேலும் சத்துள்ளதாக்கி, கலவை சாதங்கள், சுண்டல் என வழங்கச் செய்தார்.
தற்போது தமிழ்நாட்டில் 43,283 பள்ளிகளில் தினந்தோறும் 49,85,335 மாணவ, மாணவிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2011-12 முதல் 2019-20 வரை, இத்திட்டத்திற்கென 1477 கோடி ரூபாய் அம்மா அவர்களது அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவுத் திட்டத்தின் காரணமாக பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக அதிகரித்ததுடன், பள்ளிகளிலிருந்து மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாகக் குறைந்துள்ளது.
தமிழகத்திலுள்ள திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள், பசியாறி வயிறும் மனமும் குளிர ஆண்டவனை தரிசித்து
அகமகிழ்ந்திட, 754 திருக்கோயில்களில் தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை அம்மா அவர்கள் செயல்படுத்தினார். இதனால் தினந்தோறும் 65,000 பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள் என்பதை எடுத்துக் கூறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாணவச் செல்வங்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைத் தீர்த்திட, பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்ஜிஆரும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் வகுத்துத் தந்த பாதையில், அவர்கள் தொடங்கிய திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்தி வருகின்ற, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அம்மா அவர்களது அரசுக்கு, உறுதுணையாக இருக்கும் வகையில், பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர் அவர்களது ஆசியோடு, பெங்களூரில் இஸ்கான் அமைப்பின் உதவியால் அமைக்கப்பட்டுள்ள, அக்சய பாத்ரா அறக்கட்டளை அமைப்பு சமூகத் தொண்டுகளை ஆற்றி வருவதை வெகுவாக பாராட்டுகின்றேன்.

அக்சய பாத்ரா அறக்கட்டளை இந்திய நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு, இலட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவை அர்ப்பணிப்பு உணர்வுடன் அளித்து வருவதையும், தற்போது 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 16,856 பள்ளிகளில் உள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவினை வழங்கி மகத்தான சேவை ஆற்றி வருவதையும் அறிந்து, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.ஏற்கெனவே இந்த அறக்கட்டளை அமைப்பு, தமிழகத்தில், சென்னை மாநகராட்சியின் உதவியுடன், சென்னையில் 24 பள்ளிகளில் பயிலும் 5785 குழந்தைகளுக்கு தினந்தோறும் காலை உணவினை அளித்து வருவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாகும்.

இந்த மனித நேயப் பணியின் தொடர்ச்சியாக, இன்று பூமி பூஜை போடப்படும், நவீன வசதிகளுடன் அமையவிருக்கும் சமையற் கூடம் வாயிலாக சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12000 பிள்ளைகளுக்கு சத்தான காலை உணவினை வழங்க அக்ஷய பாத்ரா அமைப்பு திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக, அக்சய பாத்ரா அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ மதுபண்டிட் தாசாவுக்கும், அறக்கட்டளையின் ஏனைய பொறுப்பாளர் களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகத்தான மனித நேயப் பணியை வெற்றிகரமாகச் செயல்படுத்திட, நமது ஆளுநர், தனது விருப்ப நிதியிலிருந்து, 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின், குறிப்பாக சென்னை மாநகராட்சியின், பள்ளி மாணவச் செல்வங்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, ஆளுநர் அளித்துள்ள இந்த நிதியுதவிக்கு, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக கண்ணோட்டத்துடன், இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்விற்கு அக்சய பாத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டுக்குரியதாகும். இத்தகைய மக்கள் சேவையை ஆற்றிவரும் அக்சய பாத்ரா அறக்கட்டளைக்கு அம்மா அவர்களது அரசு, ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு,
அக்சய அறக்கட்டளை போன்று, பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.