பெரம்பலூர்

ஓட்டுக்காக தி.மு.க. பொய் பிரச்சாரம் – ஆர்.டி.ராமச்சந்திரன் குற்றச்சாட்டு

பெரம்பலூர்:-

ஓட்டுக்காக தி.மு.க. பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவதுகுறித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ரா.துரை தலைமை வகித்தார்.

இதில் மாவட்ட கழக செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவினை ஏழை, எளிய மக்களுக்கு நிறைய உதவிகளையும் நலத்திட்டங்களையும் வழங்கி கொண்டாட வேண்டும். கொடிக்கம்பத்தை புதுப்பித்து ஒவ்வொரு கிளையிலும் கட்சி கொடியை ஏற்ற வேண்டும். மேலும் வரும் நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் கழகம் அமோக வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஓட்டு வாங்குவதற்காக பொய்யான செய்திகளை தி.மு.க. பரப்பி வருகிறது. இதை ஒரு போதும் தமிழக மக்கள் நம்ப வேண்டாம். நல்ல கொள்கை,நல்ல கோட்பாடுடன் செயல்படும் கட்சி அ.தி.மு.க.. அதனால் தான் அம்மாவிற்கு பிறகும் கட்சி நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. நமது கட்சியில் இளைஞர்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் பேசினார்.