தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மார்ச் 7-ந்தேதி அடிக்கல் நாட்டு விழா – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தூர் பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் பி.நாயர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“நாகப்பட்டினம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான புதிய மருத்துவக்கல்லூரி அமைவதை முதலமைச்சர் நடப்பாண்டிலேயே நிறைவேற்றியுள்ளார். ஒரே ஆண்டில் தமிழகம் முழுவதும் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கிட அனுமதி ஆணைகள் பெறப்பட்டுள்ளன.

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரியினை கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் 12 மருத்துவக் கல்லூரிகளை அமைத்திட அனுமதி ஆணை பெற்றுள்ளது அம்மாவின் அரசு. அனுமதி பெற்றதோடு நின்றுவிடாமல், உடனடியாக நிதி ஒதுக்கி, உடனடியாக இடம் தேர்வு செய்து, மதிப்பீடுகள் செய்து, பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் பகுதியில் 60.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.366.85 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இம்மருத்துவக் கல்லூரியில் ரூ.123.05 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை, ரூ,119.03 கோடி மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி, ரூ.124.77 கோடி மதிப்பீட்டில் மருத்துவப் பேராசிரியர்கள், பணியாளர்கள், மருத்துவ மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் ஆகியவை உள்ளிட்ட 21 கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது.

இவற்றில் ஆறு அடுக்குகள் கொண்ட மருத்துவமனைக் கட்டிடம், மருத்துவக் கல்லூரி, நிர்வாக அலுவலகங்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சி கூடம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறை ஆகியவையும் அடங்கும். தற்போது, இப்பகுதியில் மண் பரிசோதனை, கருவேல மரங்களை அகற்றுதல், மண் சமப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவீரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிக்கை தயார் செய்யப்பட்டுவிட்ட நிலையில் அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி முதலமைச்சரால் இப்புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது. அதற்காக முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இம்மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் நிறைவுற்று, பயன்பாட்டுக்கு வரும்போது, இம்மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் இரா.பழனிகுமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தங்க.கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் ஏ.பிரான்சிஸ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.