தற்போதைய செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

மதுரை

குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. எனவே வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமங்கலம் தொகுதியில் உள்ள திருமங்கலம், சாத்தங்குடியில் அன்னதான நிகழ்ச்சி மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி மற்றும் ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்து 980 பயனாளிகளுக்கு, அரசின் சார்பில் 2 கோடியே 27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

மக்களின் எண்ணங்களை அறிந்து, செலவினங்களை கட்டுபடுத்தி, வறுமையை ஒழிக்கும் வண்ணம் அம்மாவின் அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை நிலைநாட்டும் வகையில் பட்ஜெட் உள்ளது. பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டம் இருக்குமா என்று சிலர் எதிர்பார்த்த நிலையில் மக்கள் உள்ளங்களை கவரும் நிலையில் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சரும், துணை முதலமைச்சர் தந்துள்ளனர்.

இந்த பட்ஜெட் பற்றி பொருளாதார வல்லுநர்களும், கல்வியாளர்களும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட் என்றும், தமிழகத்தின் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அட்சய பாத்திரமாக உள்ளது என்றும் பாராட்டி உள்ளனர். பட்ஜெட்டில் பள்ளி கல்வித் துறைக்காக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சி கால இறுதியில் பள்ளிக் கல்வித் துறைக்காக ஒதுக்கப்படும் தொகை 12,674 கோடி ரூபாயாகும். 2011 அம்மா ஆட்சியில் ரூ.16,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த 9 ஆண்டில் பள்ளி கல்வித் துறைக்கு ரூ.18,000 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு ஏற்கனவே 3,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.4,315 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்கா க1,200 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டையும் உலகுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் கீழடியில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை காட்டுவதற்காக புதிய அகழ்வைப்பகம் அமைப்பதற்கு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாக்கும் காவல்துறைக்கு 8,876 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயர்கல்வித் துறைக்கு ரூ.5052 கோடியும், வேளாண் துறைக்கு ரூ.11,894 கோடியும், மின்சாரத் துறைக்கு ரூ.20,115 கோடியும், உள்ளாட்சித்துறைக்கு ரூ.23,161 கோடியும், குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடியும், 5 புதிய மாவட்டங்களுக்கு ரூ.550 கோடியும், 11 புதிய மருத்துவக் கல்லூரிக்கு ரூ.1,200 கோடியும் என ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு இந்த பட்ஜெட்டை பாராட்ட மனமில்லை. ஏனென்றால் இந்த பட்ஜெட்டை மக்கள் பாராட்டி விட்டார்கள் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் மக்களை ஸ்டாலின் மீண்டும் மீண்டும் குழப்புகிறார். கடந்த 30 ஆண்டுகளில் அதிமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. இந்த மூன்றாண்டுகளில் கூட சிறுபான்மை மக்கள் மீது ஒரு சிறு தூசி படமால் முதலமைச்சர் காத்து வருகிறார். குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றன. எனவே மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பழுதுபார்ப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை ஒரு கோடி ரூபாயில் இருந்து இன்றைக்கு பட்ஜெட்டில் ரூ.5 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நிதி உதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வரும் வருடாந்திர நிர்வாக மானியம் 2.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையின மக்களுக்கு இது போன்ற நிதி ஒதுக்கீட்டினை செய்தது உண்டா என்று ஸ்டாலின் கூற வேண்டும். இன்றைக்கு இந்திய அளவில் கல்வி சமூகநலன், மருத்துவம், வேளாண்மை, சட்டம்- ஒழுங்கு என அனைத்து துறைகளிலும் 120 கோடி மக்களே திரும்பிபார்க்கும் வகையில் நல்லாட்சி நடத்தும் நாடு என்ற விருதினை தமிழகம் பெற்றுள்ளது ஆகவே தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கரங்களை வலுப்படுத்தும் வண்ணம் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கோட்டாட்சியர் சவுந்தர்யா, மாவட்ட கழக துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், முன்னாள் திருமங்கலம் சேர்மன் தமிழழகன், செல்லம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் பி.ராஜா, செல்லம்பட்டி சேர்மன் கவிதாராஜா, திருமங்கலம் நகர செயலாளர் ஜெ.டி.விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.