தற்போதைய செய்திகள்

வரும் அனைத்து தேர்தலிலும் கழகத்தின் வெற்றிக்கு கண் துஞ்சாது உழைத்திடுவீர் – விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள்

விழுப்புரம்

வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகத்தின் வெற்றிக்கு கண் துஞ்சாது உழைத்திடுவீர் என்று விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள்குறித்தும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி எம்.ஜி.ஆர். உருவாக்கிய, அம்மாவால் கட்டி காக்கப்பட்ட கழகத்தை சூழ்ச்சிக்காரர்கள் அழிக்க நினைத்தனர். ஆனால் முடியவில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களுடன் ஆதரவுடன் முழு பலம் பெற்றுள்ளது. எந்த சக்தியாலும், எந்த கொம்பனாலும், கழகத்தை ஆட்டவோ, அசைக்கவே முடியாது. கழகத்திற்கு முதல் எதிரி கருணாநிதி என்றாலும் அவர் மிகச்சிறந்த பேச்சாளர். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் மக்காக இருக்கிறார். குடும்ப அரசியல் நடத்தும் அவருக்கு கழகத்தை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை. இந்த ஸ்டாலின் இல்லை, இனி 100 கருணாநிதிகள் வந்தாலும் கழகத்தை அசைக்க முடியாது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பிறகு கழகத்தை பற்றி விமர்சனம் செய்தவர்களின் கண்ணோட்டம் மாறியுள்ளது. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சி செய்ய வேண்டுமென மக்கள் தெளிவாக உள்ளனர். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல அனைத்து தேர்தல்களிலும் விழுப்புரம் மாவட்டம் 100 சதவீத வெற்றி பெறவேண்டும். அதற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். தொண்டர்களை சுரண்டி கொள்ளை அடிக்கிற கூட்டம் திமுக. ஆனால் தொண்டர்களை வாழ வைக்கிற இயக்கம் அதிமுக. எனவே தொண்டர்கள் நம்பிக்கையோடு உழையுங்கள். பதவி தானாக தேடிவரும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், கழக அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், மாநில வழக்றிஞர் பிரிவு துணை செயலாளர் கதிரவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட நிர்வாகிகள் பசுபதி, ராஜேந்திரன், முகமது ஷெரிப், பட்டி பாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், தமிழ்செல்வி, சக்திவேல், நகர செயலாளர்கள் பாஸ்கரன், தீனதயாளன், ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்த நாளில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்துவது மட்டுமின்றி, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது, கண் தானம், ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள தலைவாசலில் 1100 ஏக்கரில் சுமார் ரூ.1200 கோடி செலவில் ஆசியாவில் மிக பெரிய கால்நடை பூங்கா மற்றும் மருத்துவ கல்லூரி அமைத்து தந்தமைக்கும். டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுக்காப்பு மண்டலமாக அறிவித்தமைக்கு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் பிர்ச்சாரங்களையும் போலி போராட்டங்களையும் எதிர்க்கொண்டு இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்தியுள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்திய நாடே வியக்கும் வகையில் மாபெரும் வெற்றி பெற்றிட முழு காரணமாக இருந்த வாக்காளர் பெருமக்களுக்கும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் கூட்டத்தில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் கழகம் 100 சதவீத வெற்றிக்கு கண் துஞ்சாது அயராது பாடுபட வேண்டும் என்று சூளுரை ஏற்கப்பட்டது. விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.50 கோடி வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி பெற்று தந்தமைக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி, புதிய நீதிமன்றம், புதிய நகராட்சி கட்டடம் என ரூ.100 கோடியில் நிலத்திட்டங்களை பெற்று தந்தமைக்கும் சட்டத்துறை அமைச்சருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.