காஞ்சிபுரம்

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா: காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் நலத்திட்ட உதவி – அமைச்சர் பா.பென்ஜமின் உறுதி

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அம்மாவின் பிறந்தநாளை கொண்டாட நாம் உறுதி கொள்வோம் என்று காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வாலாஜாபாத்தில் மாவட்டக் கழக அவைத்தலைவர் குன்னவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். கழக சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர்.

இதில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் 3 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சிறப்புமிக்க மாவட்டமாகும். வருடத்தின் 365 நாட்களும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அம்மாவின் பிறந்தநாளை கொண்டாட நாம் உறுதி கொள்வோம். அந்நாளில் வீதியெங்கும் அனைத்து இடங்களிலும் கழக கொடி கம்பங்களுக்கு வர்ணம் பூசி, கழக கொடியினை பட்டொளியுடன் பறக்க செய்வோம்.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நாம் மாபெரும் வெற்றியினை எளிதாக பெற்றுவிட முடியும். நாம் பிரிந்திருந்தால் அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடும். எனவே இதயதெய்வம் அம்மாவின் 72-வது பிறந்தநாளையொட்டி நடைபெறுகின்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு நகராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர், பேரூராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலும் 100 சதவீத வெற்றியினை வென்றிடுவோம் என உறுதிகொள்வோம். வென்று முடிப்போம்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.