ராமநாதபுரம்

கிளை கழகங்கள் தோறும் அம்மா பிறந்தநாள் விழா – ராமநாதபுரம் மாவட்ட கழகம் முடிவு

ராமநாதபுரம்

கிளை கழகங்கள் தோறும் அம்மா பிறந்தநாள் விழாவை கொண்டாட ராமநாதபுரம் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பரமக்குடி கீர்த்தி மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர், கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கழக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அ.அன்வர்ராஜா ஆகியோர் பேசினர். முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் கழகத்தின் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வெகு சிறப்பாகவும், விமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தனது கொள்கையிலும், விடா முயற்சியிலும் உறுதியாக இருந்து கடைசி வரை நாட்டின் நலனை மட்டும் நேசித்து மறைந்த இதயதெய்வம் தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இந்த தெய்வத்தாயின் பிறந்த நாளில் அனைவரும் ஆட்சி நீடிக்க சபதம் ஏற்க வேண்டும். கழக நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் கழக கொடிகளை ஏற்றவேண்டும்., பழைய கொடிகளை புதுப்பித்து புதிய கொடிகளை ஏற்ற வேண்டும்.

ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் அம்மா அவர்கள். கழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடத்தில் அனைவரும் கொண்டு சேர்க்க வேண்டும். புதிய வாக்காளர்களையும், இளைஞர்களையும் கழகத்தில் இணைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அம்மாவின் பிறந்தநாளன்று நாமும் அவர்களது வழியில் செயல்பட வேண்டும். அனைத்து கிளைக்கழகம் முதல் ஒன்றிய கழகம் வரை அம்மாவின் பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாட வேண்டும். வருகின்ற 2021-லும் நமது கழக ஆட்சி தான் நடக்கும். புரட்சித்தலைவி அம்மாவின் 72-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை இளைஞர்கள் எழுச்சி நாளாகவும், வறுமை ஒழிப்பு தினமாகவும் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.