தற்போதைய செய்திகள்

எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது – அமைச்சர் கே.பி.அன்பழகன் கடும் தாக்கு

தருமபுரி

எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தி.மு.க.வால் இனி வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி டிஎன்சி விஜய் மஹாலில் மாவட்டக் கழக அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், கழக விவசாய பிரிவு தலைவர் தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி பொருளாளர் அ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கழக செயலாளர் பி.குருநாதன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் பேசியதாவது:- 

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வெற்றி வாகை சூடியது. இது அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அதற்காக சிறப்பாக பணியாற்றிய கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், அம்மா அவர்களால் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கடத்தூர், ஏரியூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களிலும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றியக்குழு தலைவர்களாக வந்துள்ளனர். அதற்காக அர்ப்பணிப்போடு உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி தொடரும். திமுக எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் வெற்றிபெற இயலாது மூன்றாவது முறையாக மீண்டும் நாம் வெற்றி பெற பாடுபடவேண்டும் அதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் முதல்வராக வர வேண்டும் அதற்காக தர்மபுரியில் உள்ள 5 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கு முழுவீச்சில் பணியாற்றிட வேண்டும். வருகின்ற உள்ளாட்சித்தேர்தலில் முழுவீச்சில் பணியாற்றி ஒரு நகராட்சி, 10 பேரூராட்சிகளில் முழுவதுமாக நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எடப்பாடியார் அம்மா வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்பொழுது 10 டவுன் பஞ்சாயத்துகளிலும் நிர்வாகிகளை நியமனம் செய்துவிட்டு இன்று முதலே அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். 10 பேரூராட்சிகளிலும் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை அதிமுக கூட்டணி தான் கைப்பற்ற வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. அம்மா பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பயன்படும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். அம்மாவின் பிறந்தநாள் விழா ஒரு மாத காலமாக கொண்டாடப்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.