தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் – அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

கடலூர்

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

கடலூர் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பான கழக செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கழக மருத்துவர் அணி மாநில தலைவர் எஸ்.பி.கே.சீனிவாசராஜா தலைமை தாங்கினார். கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜி.ஜே.குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கே.காசிநாதன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி முன்னாள் நகரமன்ற தலைவர் சி.கே.சுப்பிரமணியன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்,சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது, மறைந்த புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழாவை கடலூர் மத்திய மாவட்டத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அன்னதானம் வழங்கி மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி தங்களால் முடிந்த அளவுக்கு அன்னதானத்தை வழங்க வேண்டும்.

அம்மாவின் பிறந்த நாளில் அனைத்து இடங்களிலும் உள்ள கோயில்களில் அம்மாவின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். கடந்த ஆண்டு கொண்டாடியதை விட மிகச் சிறப்பாக இந்த ஆண்டு நாம் கொண்டாட வேண்டும். கடலூர் மத்திய மாவட்டம் பட்டிதொட்டியெல்லாம் மிகச்சிறப்பாக அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடியது என்ற பெயரை பெற்றுத்தர வேண்டும்.

நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மத்திய மாவட்டம் சிறப்பான பல வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த வெற்றியை தேடித்தந்த கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வெற்றிபெற்ற ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கும் ஊராட்சி தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் தமிழகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தேர்தல் வர உள்ளது அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

விரைவில் நடக்கும் நகராட்சித் தேர்தலில் கடலூர் மத்திய மாவட்டத்திலுள்ள கடலூர் நகராட்சி, பேரூராட்சிகளான வடலூர், குறிஞ்சிப்பாடி ஆகியவற்றில் நாம் வெற்றிபெற வேண்டும், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

கடலூரில் 50 ஆயிரம் கோடியில் பெட்ரோகெமிக்கல் நிறுவனம் விரைவில் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் கழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 25 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். கடலூர் கேப்பர் மலையில் காலணி செய்யும் தைவான் நாட்டின் தொழிற்சாலை ஒன்று வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறலாம். இந்த திட்டங்கள் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டால் வேலைவாய்ப்புகள் பெருகி மாவட்ட மக்களின் பொருளாதாரம் உயரும்.

உலக அளவில் பொருளாதார மந்த நிலை இருந்தாலும் தமிழகத்தில் தினந்தோறும் வெளிநாட்டுக் கம்பெனிகள் வந்து தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றியுள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சருக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.