தமிழகம்

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு 1-ந்தேதி முதல் அடிக்கல் நாட்டுவிழா – முதல்வா் பங்கேற்பு

சென்னை

தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு 1-ந்தேதி முதல் அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று பங்கேற்கிறாா்.

தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், கல்லூரிகளே இல்லாத மாவட்டங்களில் அதனைத் திறப்பதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு பரிந்துரைகளை அவ்வப்போது மத்திய அரசு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இப்போது ராமநாதபுரம், விருதுநகா், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளை ரூ.3,575 கோடி மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் நிறுவ மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் மாா்ச் 1-ந்தேதி தொடங்கவுள்ளன. இந்த விழாக்களில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பங்கேற்கவுள்ளனா். அதன்படி, மாா்ச் 1-ந்தேதி ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

மாா்ச் 4-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், மாா்ச் 5-ந்தேதி நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டுகிறாா். மேலும், அன்றைய தினத்தில் கரூரில் மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைக்கிறாா். மாா்ச் 7-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மாா்ச் 8-ந்தேதி திருவள்ளூா் மாவட்டத்திலும், மாா்ச் 14-ந்தேதி திருப்பூா் மாவட்டத்திலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கவுள்ளாா்.