சிறப்பு செய்திகள்

சாதனை படைத்த சாமானிய முதல்வர் : தலைவர்கள், கழக தொண்டர்கள் வாழ்த்து

சென்னை

தமிழக முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து நேற்று 4-ம் ஆண்டு தொடங்கியது. முதலமைச்சராக பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 382 கோப்புகளில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கையெழுத்திட்டு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு, என்ற சட்டத்தின் மூலம் மற்ற மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தார். தான் ஒரு விவசாயி என்பதை நிரூபிக்கும் வகையில் முதலில் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார். 83 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையை தூர்வார ஆணையிட்டு செயல்படுத்தினார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தார். மக்களின் கனவான 5 புதிய மாவட்டங்களை உருவாக்கினார்.

அனைத்து துறைகளையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பல்வேறு விருதுகளை பெற்றார். விவசாய உற்பத்தியில் சாதனை படைத்து 5 ஆண்டுகளாக தொடர்ந்து மத்திய அரசின் விருதுகளை வாங்கியது. அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்தது, இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என விருது பெற்றது என எண்ணற்ற சாதனைகளை பட்டியலிட்டு சொல்லும் அளவுக்கு சாதனை மேல் சாதனைகளை படைத்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.

நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன், என்பதை சொல் வடிவில் மட்டுமல்லாமல், வேளாண் உற்பத்தியில் தனி கவனம் செலுத்தி ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு சலுகைகளை அளித்து ‘விவசாயிகளின் பாதுகாவலன்’ என்பதை நிரூபித்துள்ளார். அனைத்திற்கும் மகுடம் சூட்டும் வகையில் காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்தார்.

இப்படி சாதனைக்கு மேல் சாதனைகளை சேர்த்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காலை மாவட்ட நிர்வாகிகள் ஆலேசானை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைமை கழகத்திற்கு வந்தபோது அங்கு கூடியிருந்த கழகத்தினர் மலர் கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். தொண்டர்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த முதலமைச்சர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கூட்டணி கட்சிகளான பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.