தற்போதைய செய்திகள்

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் – கழக மீனவர் பிரிவு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசிடம், கழக அரசு வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு கழக மீனவர் பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து கழக மீனவர் பிரிவு மாநில நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து தமிழக மக்கள் நலன் ஒன்றை மட்டுமே தனது முழு மூச்சாகக் கொண்டு தமது வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவையில் மகத்தான சாதனை படைத்திட்ட கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் இதயதெய்வம், தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை (24.2.2020) முன்னிட்டு தமிழகம் முழுவதும் கழக மீனவர் பிரிவின் சார்பில் ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என கழக மீனவர் பிரிவின் சார்பில் தீர்மானிக்கப்படுகிறது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், சிறப்பாக செயல்பட்டு கழக அரசை வெற்றிகரமாக நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கழக மீனவர் பிரிவு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்தும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்துவதற்கு தொடர்ந்து அரும்பாடுபட்டு வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கழக மீனவர் பிரிவு தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தினந்தோறும் மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீன்பிடித் தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். பழங்குடியினர் பெற்றுவரும் பயன்கள் அனைத்தையும், மீனவர்களும் பெறும் வகையில், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசிடம், கழக அரசு வலியுறுத்த வேண்டும் என கழக மீனவர் பிரிவின் சார்பில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

சர்வதேச அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்த, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பு சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பை வெற்றிகரமாக நிகழ்த்துவதற்கு உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர். மீனவ மக்களின் கடல் மாதாவாகத் திகழும் அம்மாவின் திருப்பெயரை கிழக்கு கடற்கரை சாலைக்கு சூட்ட வேண்டும் என கழக மீனவர் பிரிவு சார்பில் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

அன்றாடம் தொழில் செய்தால் தான் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்ற தருணத்தில், புயல் மற்றும் கடல் சீற்றம் தட்ப வெப்பநிலை காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசின் சார்பில் எச்சரிக்கப்படும் நாட்களில் ஒவ்வொரு மீனவர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் நிவாரண உதவித்தொகை வழங்கி, மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உதவி செய்திடுமாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கழக மீனவர் பிரிவு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

அம்மா அவர்களின் பூரண நல்லாசியோடு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வரும் தமிழக அரசின் பட்ஜெட்டில், மீனவர்கள் வயிற்றில் பால் வார்க்கும் அளவில், மீன்பிடித் தடைக்காலத்தில் உதவித்தொகை வழங்கவும், மீனவர்களுக்கான சேமிப்பு திட்டத்திற்காகவும் சிறப்பு உதவித் தொகை வழங்க 298.21 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 4,997 மீன்பிடி விசைப்படகுகளில், 18 கோடி ரூபாயில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும். பாக் வளைகுடா பகுதி மீனவர்களுக்கான 2,000 இழுவலை மீன்பிடி படகுகளை ஆழ்கடல் மீன்படகுகளாக மாற்றும் சிறப்புத் திட்டம் 1,600 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 500 தூண்டில் செவுள் வலையுடன் கூடிய ஆழ்கடல் சூரை மீன்பிடிப்படகுகள் கட்டப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரைக் குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத் துறையிலும் 385 கோடி ரூபாயில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 30 கோடி ரூபாயில் கடலரிப்பு தடுப்புச் சுவர்கள் கட்டப்படும். ஆக மொத்தம் 1,229.85 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, கழக மீனவர் பிரிவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்மா அவர்களின் அரசு மீனவ மக்களுக்கு ஆண்டுக்கு விசைப்படகுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 18,000 லிட்டர் டீசலும், பைப்பர் படகுக்கு ஆண்டுக்கு 4,000 லிட்டர் டீசலும் வழங்கப்பட்டு வருகிறது. அதை விசைப்படகுக்கு ஆண்டுக்கு 25,000 லிட்டர் டீசலும், பைப்பர் படகுக்கு 6,000 லிட்டர் டீசலும் மானியமாக உயர்த்தி வழங்க வேண்டியும், மேலும் மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானிய தொகை மாதம் தோறும் வங்கி கணக்கில் சேர்த்து மீனவ சமுதாய மக்கள் மேம்பாட்டிக்கு உதவிடும்படியும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கழக மீனவர் பிரிவு அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

உள்நாட்டு மீனவர்களுக்கு ஆறு, ஏரி, குளம் அணைகளில் மீன்பிடிக்கும் உரிமை கழக மீனவர் பிரிவு நிர்வாகிகளுக்கு குத்தகை அடிப்படையில் முன்னுரிமை அளித்தும் உதவிடும்படி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் கழக மீனவர் பிரிவு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.