தற்போதைய செய்திகள்

சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் கழக அரசு – அமைச்சர் க.பாண்டியராஜன் பெருமிதம்

திருவள்ளூர்:-

சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக கழக அரசு திகழ்கிறது என்று ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் மாஃபா அறக்கட்டளை மற்றும் இந்திய சிறுபான்மை பொதுநல வாரியம் சார்பாக கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹிம், பேராசிரியர் கோஷி, மாஃபா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் லதா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் 600 க்கும் மேற்பட்ட தேவாலயங்களை சார்ந்த போதகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பட்டாபிராம் பகுதியை சார்ந்த பாதிரியார் ஒருவர் பட்டாபிராம் பகுதியில் உயிரிழந்த கிறிஸ்தவ உடல்களை அடக்கம் செய்ய இந்த வசதி இல்லாததால் மிகவும் சிரமமாக உள்ளது. இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசுகையில்”: சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக அம்மாவின் வழியில் நடைபெற்று வரும் கழக அரசு செயல்படுகிறது. கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருவேருக்கு சாதனையாளர் விருது மற்றும் நல்ல சாமானியர் விருதும் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கேக் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காசு ஜனார்த்தனம், நகர செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் உட்பட திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஆலயத்தை சார்ந்த போதகர்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் டேவிட்ராஜன் செய்திருந்தார்.