மதுரை

கழகம் தான் நூறு ஆண்டு மக்கள் பணியாற்றும் அதற்கு முதல்வரின் 3 ஆண்டு ஆட்சியே சாட்சி – வி.வி.ராஜன்செல்லப்பா பெருமிதம்

மதுரை

கழகம் தான் நூறு ஆண்டு மக்கள் பணியாற்றும், அதற்கு முதல்வரின் 3 ஆண்டு பொற்கால ஆட்சியே சாட்சி என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் செய்த சாதனைகள், திட்டங்கள் எண்ணிலடங்காதவை.

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றுத் தந்தார். ரூ.1000 கோடியில் உயர்மட்ட பாலம், வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள், மதுரை காளவாசல் பகுதியில் ரூ.59 கோடி செலவில் உயர்மட்ட பாலம், மதுரையை சர்வதேச தரத்துக்கு இணையாக உருவாக்க ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ.29 கோடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரூ.150 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம், மதுரை மாவட்ட கிராம பகுதிகள் முழுவதும் தரமான சாலைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற சாதனை திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

மூன்று ஆண்டில் 16,000 கோப்புகளுக்கு மேலாக கையெழுத்திட்டு கடைக்கோடி மக்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களை தந்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. இந்த இயக்கம்தான் இன்னும் நூறு ஆண்டுகள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அம்மா கூறினார்.

நிச்சயம் அம்மாவின் தெய்வ வாக்கு பலிக்கும். ஏனென்றால் முதலமைச்சரின் இந்த மூன்றாண்டு பொற்கால ஆட்சியே அதற்கு சாட்சியாக இருக்கிறது. 100 அல்ல இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் அன்னைத் தமிழகத்தில் நமது இயக்கம் தான் ஆளும். அதற்குரிய அடித்தளத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.