தற்போதைய செய்திகள்

பள்ளிகள் தரம் உயர்வுக்கு பங்கீட்டு தொகையில் விலக்கு அளிக்க நடவடிக்கை – பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

சென்னை

பள்ளிகளை தரம் உயர்த்த பங்கீட்டு தொகையிலிருந்து விலக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது கம்பம் தொகுதி உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், கம்பம் தொகுதிக்குட்பட்ட உத்தமப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், உ.அம்மாப்பட்டி கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா? என்று கேட்டார்.

அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளிக்கையில், இந்த ஆட்சி சரத்திர சாதனையாக 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறந்த ஆட்சியை நடத்தி் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெருமையை இந்த அரசு பெற்றுள்ளது. சோழ மண்டலத்தை சிறப்பு பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வேளாண் குடிமக்களை பாதுகாக்க உதவும். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தலைவாசலில் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 9 மருத்துவ கல்லூரி துவங்குவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. அம்மா வழியில் நடைபெறும் இந்த ஆட்சி அவர் கூறியது போல், 3 ஆண்டுகள் மட்டுமல்ல 100 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வகையில் எளிமையான முறையில் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் கேட்டுள்ள பகுதியில் போதுமான நிலம் இல்லை. நிதியும் செலுத்தப்படவில்லை. ஒரு பள்ளியை தரம் உயர்த்த 3 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால் அங்கு 1.39 ஏக்கர் நிலமே உள்ளது. ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படவில்லை. ஆனாலும் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்று, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் பிச்சாண்டி துணை கேள்வி ஒன்றை எழுப்பினார். பள்ளிகள் தரம் உயர்த்தப்படாததால், மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதற்கு பதில் கூறிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இந்த அரசு எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும். கூடுதல் மாணவர் சேர்க்கை இருந்தால், தரம் உயர்த்த ஆய்வு நடத்தப்படும். இந்த ஆட்சியில் 222 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

அதைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு பள்ளிகளை தரம் உயர்த்த பங்கீட்டு தொகை வழங்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. அரசு அதற்கு விதிவிலக்கு வழங்கி பொதுமக்கள் பங்களிப்பு தொகை இல்லாமல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் எல்லா பகுதிகளிலும் பொதுமக்கள் பங்களிப்பு கேட்பதில்லை. மலை பகுதிகள் மற்றும் குக்கிராம பகுதிகளுக்கு ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து பகுதிகளுக்கும் உறுப்பினர் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.