தற்போதைய செய்திகள்

பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க முதலமைச்சர் உத்தரவு – சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை

அதிகம் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கையில் உறுப்பினர் குறிப்பிடும் பகுதியில் கழிவுநீர் சாலையில் சென்றால் அது உடனடியாக சரிசெய்யப்படும். மேலும் பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை, குறிப்பாக அதிகம் பழுதடைந்த சாலைகளை நிவர்த்தி செய்யுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சாலைகள் பழுதடைந்திருந்தால் அதுவும் சரி செய்யப்படும். பாதாள சாக்கடை திட்டத்திற்கு உங்கள் ஆட்சியில் தான் அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அம்மா அவர்களால் 2015 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. உறுப்பினர் தெரிவித்தது போல சூழ்நிலை இருந்தால் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.