தற்போதைய செய்திகள்

இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது – தி.மு.க. உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

சென்னை

இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தட்கல் முறை கட்டாயம் இல்லை என்று தி.மு.க. உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பி.தங்கமணி பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது, கருங்குழி ஊராட்சியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகளை தொடங்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசுகையில், ஒரு சாமானியன் அரசை ஆள முடியுமா என்றார்கள். ஆனால் இன்று ஆண்டு கொண்டு இருக்கிறார். ஒரு சாமானியன் தான் 3 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். அம்மாவின் கனவு நிறைவேறி உள்ளது.

அம்மா இந்த சட்டமன்றத்தில் பேசியதுபோல இந்த ஆட்சி 100 ஆண்டுகள் தொடரும். குடிமராமத்து நாயகனாகவும், விவசாயிகளின் பாதுகாவலனாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் கூறிய பகுதியில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது. நிலத்தின் விலையும் அதிகமாக உள்ளது. குறைந்த விலையில் இடத்தை உறுப்பினர் பெற்று தந்தால், அங்கு துணை மின்நிலையம் அமைத்து தரப்படும். உறுப்பினர் கூறியதுபோல் 100 மீட்டர், 200 மீட்டர் உள்பகுதியில் இருந்தாலும் பரவாயில்லை. வண்டி சென்று வர பாதை வேண்டும். அப்படி இடம் தேர்வு செய்து தந்தால் துணை மின்நிலையம் அமைத்து தர அரசு தயாராக உள்ளது என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து இலவச மின்சாரம் பற்றியும், தட்கல் முறையில் மின்இணைப்பு வழங்குவது பற்றியும் தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் பி.தங்கமணி பதிலளிக்கையில், உங்கள் ஆட்சி முடியும் தருவாயில் 7 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தீர்கள். ஆனால் 1 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. மின்இணைப்புகள் வழங்கி என்ன பயன். உங்கள் ஆட்சியில் மின்சாரமே இல்லை. மின்சாரம் இருந்தால் தானே இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்.

தட்கல் முறை என்பது கட்டாயம் அல்ல. ரயிலில் பயணம் செய்பவர்கள் தட்கலில் டிக்கெட் எடுக்கிறார்கள். தட்கலை எடுக்க அவர்களை யார் வலியுறுத்தியது. உடனடியாக மின்இணைப்பு வேண்டும் என்பவர்கள் தட்கல் முறையை கேட்கின்றனர். சூப்பர் தட்கல் கொண்டு வந்தாலும் சரி என்கிறார்கள். தட்கல் என்பது மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப வழங்கப்படுவது. அது கட்டாயம் அல்ல.

கடந்த 3 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 621 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மானியம் வழங்கப்படுகிறது. அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து மின் இணைப்பு வழங்கி வருகிறோம். இது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்து இலவச மின்சாரத்தையும், விவசாய மின் இணைப்பையும் வழங்கி வருகிறது என்றார்.