தற்போதைய செய்திகள்

கிராம நிர்வாக அலுவலகங்களில் இ-சேவை மையம் அமைக்க அரசு பரிசீலனை – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை

கிராம நிர்வாக அலுவலகங்களில் இ-சேவை மையம் அமைக்க அரசு பரிசீலனை செய்யும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  கேள்வி நேரத்தின் போது சேலம் தெற்கு தொகுதி உறுப்பினர் சக்திவேல் அம்மா இ-சேவை மையங்களை வட்டாட்சியர் அலுவலகம், கூட்டுறவு கடன் சங்கங்கள் மட்டுமல்லாமல், கிராம நிர்வாக அலுவலகங்களிலும் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளிக்கையில், சேலம் தெற்கு தொகுதியில் மொத்தம் 4 இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு 5 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவை ஏற்படின் பிற இடங்களில் இ-சேவை மையங்கள் திறக்க அரசு பரிசீலிக்கும். இ-சேவை மையங்கள் மூலம் சான்றிதழ்களை மக்கள் பெற முடிகிறது. உறுப்பினர் சக்திவேல் தொலைநோக்கு பார்வையுடன் இந்த கேள்வியை கேட்கிறார்.

தற்போது வட்டாட்சியர் அலுவலகம், கூட்டுறவு கடன் சங்கம், கேபிள் டி.வி. அலுவலகம், தொடக்க வேளாண்மை சங்கம் போன்றவற்றில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. கிராம நிர்வாக அலுவலகங்களில் இ-சேவை மையம் அமைக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.