தமிழகம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மாணவர்களின் கல்விக்கட்டணம் ரத்து – தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிகல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம் ரத்து செய்து அரசாரணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்
கட்டணம் (டியூசன் பீஸ்) வசூலிக்கப்படுவதில்லை. அதுபோல இந்தப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரின் பொருளாதார வசதியை கருத்தில் கொண்டும், படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை முழுவதுமாக நீக்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் ஒன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்தில்இருந்து சட்ட விதிகளின்படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கும் இதர வகுப்பு மாணவர்கள் தவிர மற்றவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு வழங்குகிறது.

புள்ளியியல் விபரங்களின்படி ஆங்கில வழிக் கல்வியில் 23 ஆயிரத்து 314 மாணவர்களிடம் இருந்து ரூ.67 லட்சம் மட்டுமே கல்விக் கட்டணமாக பெறப்படுகிறது.எனவே கல்விக் கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதி மாணவர்கள் பலரும் ஆங்கில வழிக் கல்வியைப் பெற்று பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தகுதிப்படுத்த வாய்ப்பு
கிடைக்கும்.

எனவே ஆங்கில வழியில் கல்வி பயிலும் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான கல்விக்கட்டணத்தையும் நீக்கிவிடலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதை ஏற்க அரசு முடிவு செய்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறையில் படிக்கும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதில்லை என்று உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.