தற்போதைய செய்திகள்

34 வகையான புதிய நெல் ரகங்கள் கண்டுபிடிப்பு – பேரவையில் அமைச்சர் இரா.துரைக்கண்ணு தகவல்

சென்னை

34 வகையாக புதிய நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது வந்தவாசி தொகுதி உறுப்பினர் அம்பேத்குமார் பேசுகையில் வந்தவாசி தொகுதிக்கு உட்பட பெரணமல்லூரில் வேளாண்மை கல்லூரி துவக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேட்டார்.

அதற்கு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பதிலளிக்கையில், பெரணமல்லூரில் புதிய வேளாண்மை கல்லூரி துவக்க சாத்திய கூறுகள் இல்லை என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு லால்குடிக்கு அருகே புதிய வேளாண்மை கல்லூரி துவக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. அங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. அங்கு புதிய கல்லூரி துவக்க ஆவன செய்ய வேண்டும். மேலும் வேளாண் ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். புதிய நெல் ரகங்களை கண்டுபிடிக்க அரசு முன் வர வேண்டும். ஏற்கனவே கண்டுபிடிக்க சில ரகங்கள், அதிக மகசூலை தரவில்லை என்றார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் இரா.துரைக்கண்ணு, அம்மா ஆட்சியில் தான் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் மகளிருக்காக பிரத்யேக வேளாண் கல்லூரி துவக்கி வைக்கப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டது. வேளாண்மை ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் புதிய 34 வகையான நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.