சிவகங்கை

கீழடி அகழாய்வில் மிக நீண்ட தரைதளம் கண்டுபிடிப்பு…

சிவகங்கை:-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5ம் கட்ட அகழாய்வில் மிக நீண்ட தரை தளம் கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இதுவரை இரட்டைச்சுவர், அதன் தொடர்ச்சி, கோட்டை வடிவிலான சுவர், தண்ணீர் தொட்டி, சுடுமண் குழாய் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் இப்போது தரை தளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சுடுமண் குழாய் கண்டறியப்பட்ட குழியின் வெகு அருகே இந்த தரை தளம் கண்டறியப்பட்டுள்ளது. 20 செ.மீ நீள, அகலம் கொண்ட கற்கள் தரையில் பதிக்கப்பட்டுள்ளன. ஒருசில கற்கள் வரிசையாகவும் சில கற்கள் திசை மாறியும் பதிக்கப்பட்டுள்ளது. கற்களின் மேற்புறம் பிடிமானத்திற்காக கோடுகள் வரையப்பட்டுள்ளதுடன் மேற்புறம் சிறிய துளை போன்ற அமைப்பும் காணப்படுகிறது.

சுடுமண் குழாயின் அருகிலும் இதுபோன்ற சிறிய தரை தளம் காணப்படுகிறது இந்த தளத்தின் கீழ்புறம் உள்ளவற்றை அகழாய்வு செய்யும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது பெரும்பாலும் தரை தளமாகவே இருக்க வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது. இந்த தளத்தின் வெகு அருகில் சுடுமண் குழாய் இருப்பதால் தரை தளத்தின் உள்ளே அல்லது வெளியே தண்ணீர் கொண்டு செல்ல இந்த சுடுமண் குழாய் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையான பயன்பாடு முழுமையாக அகழாய்வு செய்யப்பட்ட பின் தான் தெரியவரும்.