திருவண்ணாமலை

வெம்பாக்கத்தில் 50 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார்…

திருவண்ணாமலை:-

செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியத்தில் 50 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 50 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார். நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பூ.செந்தில்குமாரி தலைமை தாங்கினார். கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மேலாளர் ஹரி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு தமிழக முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பாரத பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டத்தில் தலா ரூ.1.70 லட்சத்தில் 30 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 50 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

பின்னர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் நடைபெறம் ஆட்சியில் கிராமத்தில் வீடில்லாமல் வசிக்கும் ஏழ்மையானவர்களை தேடித்தேடி அரசின் பசுமை வீடுகள், பாரத பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்ட ஆணைகளை வழங்கி வருகிறோம் அதன் படி இன்று இங்கு 50 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. வீடு கட்டுவதற்கான ஆணை பெற்றவர்கள் காலதாமதமின்றி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி உரிய நேரத்தில் வீடுகட்டி பயன்பெறுங்கள்.

இவ்வாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் டி.பி.துரை, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் எம்.மகேந்திரன், எம்ஜிஅர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.கார்த்திகேயன், பாசறை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.திருமூலன், ரமேஷ், ராஜ்கணேஷ், குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.