தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரியில் காற்றின் வேகத்தை தடுக்க தொடர் சவுக்கு தோப்புகள் அமைக்கப்படும் – சட்டசபையில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்

சென்னை

கன்னியாகுமரியில் காற்றின் வேகத்தை தடுக்க தொடர் சவுக்கு தோப்புகள் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தி்ன்போது கிள்ளியூர் தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோரங்களில் சதுப்பு நில காடுகள் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வருமா? இத்தகைய காடுகள் கடல் சீற்றம், ஆழிபேரலை, இயற்கை பேரிடர்களை பாதுகாக்கிறது என்றார்.

இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பதிலளிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றின் வேகம், அலை சீற்றம் ஆகியவற்றால் வீடுகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கடல் அரிப்பு, மண் அரிப்பை தடுக்கவும், புயலின் வேகத்தை கட்டுப்படுத்தவும் சதுப்பு நில காடுகள் உதவுகிறது. இந்த பகுதிகளில் சவுக்கு மரங்களை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர் சவுக்கு தோப்பு அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதோடு, காற்றின் வேகம் கட்டுப்படுத்தப் படுகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகமாக கிடைக்கிறது. எரிபொருள்கள் பசுந்தாள்கள் போன்றவை கிடைக்கின்றன. உறுப்பினர் கூறிய பகுதியில் தொழில்நுட்ப ஆய்வு செய்து, நிதி ஆதாரத்தின் அடிப்படையில், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் கன்னியாகுமரி பகுதியில் மனக்குடி பகுதியில் இயற்கை பாதுகாப்பாக சதுப்பு நில காடுகள் அதிகமாக உள்ளன.அங்கு எக்கோ பார்க் அமைக்கப்படுவதால், சதுப்பு நில காடுகள் அழியும் சூழல் காணப்படுகிறது. இயற்கை சீற்றைத்தை தடுக்கும் சதுப்பு நில காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக சதுப்பு நில காடுகளை உருவாக்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், இது தொடர்பாக மீன் வளத்துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்தி, அவரது கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் அம்மா ஆட்சியில் சதுப்பு நில காடுகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என்று பதிலளித்தார்.